3809. பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
பெரும்புகழைப் பேசுதலை பெரும்பேறென் றுணர்ந்தே
துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்தே
அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
உலகம்எலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.
உரை: எல்லா வுலகங்களும் இன்புற்று ஓங்குமாறு உயர்ந்த நடம் புரிகின்ற அருளரசே; பெருமை யுடையவனும் திருவருள் ஞானமாகிய பேரொளியையுடைய பெரிய கருணை உருக் கொண்ட பெருமானுமாகிய சிவபெருமானுடைய பெரிய புகழை எடுத்தோதுவதே பெருஞ் செல்வம் என்றுணர்ந்து துரிய நிலையிலிருந்து வழிபடுகின்ற பெருமக்கள் எல்லாரும் உன்னைத் துதிக்கின்றார்கள்; ஆகவே அவர்களை ஏழையாகிய யான் துதி செய்தல் பெருமை யுடையதாகாது; ஆயினும் இங்கே உன்னைத் துதித்தல் வேண்டுமென்று என் உள்ளத்தில் எழுந்த அரும் பெரும் அன்பாகிய கடல் பெரிதாகும்; அன்றியும் அது என்னுடைய அளவு கடந்து என்னை ஈர்க்கின்றதாதலால், விரைவுடன் உரியதாகிய உனது திருவருள் அமுதத்தை அளித்து உன்னை நான் நன்கு நினைத்துத் துதித்திட அருள் புரிய வேண்டுகிறேன். எ.று.
உலகுயிர்களெல்லாம் மலப் பிணிப்பின் நீங்கி உய்தி பெறற் பொருட்டே இறைவனது திருநடனம் அம்பலத்தில் நடைபெறுகிறது என்ற உண்மை விளங்க, “உலகமெலாம் களித்தோங்க ஓங்கு நடத்தரசே” என்று சிவனைப் பாராட்டுகின்றார். எல்லாத் தேவ தேவர்கட்கும் பெரியவன் என்பது பற்றி, “பெரியன்” என்றும், திருவருள் ஞான ஒளியுடன் பேரருளுருவாகிய பெருமான் சிவன் என்பது பற்றி, “அருட் பெருஞ் சோதிப் பெருங் கருணைப் பெருமான்” என்றும், அவனுடைய பெரும் புகழை விரும்பிப் பேசுவதே பெருஞானச் செல்வமாம் என்று எண்ணிச் சிவயோகிகள் எல்லாரும் எப்பொழுதும் துதித்து வாழ்கின்றார்கள் என்பாராய், “பெரும் புகழைப் பேறு என்றுணர்ந்து துரிய நிலத்தவர் எல்லாம் துதிக்கின்றார்” என்றும் எடுத்து மொழிகின்றார். துரிய நிலத்தவர், சாக்கிரத்தே துரியாவத்தைக் கண் இருந்து யோக நெறி மேற்கொண்டு சிவயோகம் புரியும் பெருமக்களை, “துரிய நிலத்தவர்” என்று குறிக்கின்றார். அப்பெரியோர்களது புகழுரைகளை நோக்க, தமது வழிபாடு மிகச் சிறிதாதலை யுணர்ந்து, “இங்கு ஏழை துதித்தல் பெரிதல” எனவும், என்றாலும் சிவனைத் துதிப்பதற்கு வடலூர் வள்ளலது உள்ளத்தே எழுந்த ஆர்வ மிகுதியை விதந்து “இங்கே துதித்திட என்று எழுந்த அரிய பெரும் பேராசைக் கடல் பெரிது” எனவும், பெரிதாகிய அவ்வார்வக் கடல் நின்றாங்கு நில்லாது என் உள்ளத்தின் எல்லை முழுதும் நிறைந்து என்னையும் தன் போக்கில் இழுக்கின்றது என்பாராய், “அதுதான் அளவு கடந்து இழுக்கின்றது” எனவும், அதனால் எனக்கு அருள் ஞான வமுதம் அளித்து அறிவு நிறைவித்து உன்னையே நினைந்து துதித்து வீழுமாறு அருள் புரிதல் வேண்டுமென விண்ணப்பிக்கின்றாராதலால், “அது என் அளவு கடந்து இழுக்கின்றதாதலினால், “விரைந்து உரிய அருளமுது அளித்து நினைத் துதிப்பித்து அருள்வாய்” எனவும் வேண்டுதல் செய்கின்றார்.
இதனால், எனது ஆசைப் பெருக்கை நோக்கி அருளமுதம் வழங்கிச் சிவபரம்பொருளாகிய நின்னையே துதித்து வாழ்தற்கு அருள்க என விண்ணப்பம் செய்தவாறாம். (10)
|