3810. கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே
கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே
சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்
தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்
தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து
தானாகி நானாடத் தருணம்இது தானே
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்
குருவேஎன் குற்றம்எலாம் குணமாக்கொண் டவனே.
உரை: குருமுதல்வனே! யான் செய்யும் குற்றங்கள் எல்லாவற்றையும் என் உயிர்க் குணமாகக் கருதிப் பொறுத் தருளுபவனே; மனக் கவலை யெல்லாம் போக்கி மிகுந்த மகிழ்ச்சியோடு கைகுவித்து வணங்கிக் கண்களில் நீர் பெருகக் கோழைத் தன்மை பொருந்திய என் மனத்தின் சலனங்கள் தீர்ந்து சுகமயமாய்த் தானே தனக்கு முதலாய் இன்பம் பெருகும் ஒப்பற்ற திருநடம் புரிகின்ற இரண்டாகிய நின் திருவடிகள் பொருளாகக் கெடுவதில்லாத சிறப்புக்களையுடைய சொன்மாலைகளைப் பலவாறும் தொடுத்துத் திருவடிகளில் அணிந்து சிவமயமாய் நானும் ஆடுதற் பொருட்டு இத்தருணத்தில் உலகவர் கண்டு அதிசயிக்கும் படியாக எழுந்தருளி வந்து அருளுவாயாக. எ.று.
கவலை தவிர்த்துக் களிப்போடு நினையே நினைந்து மனங் கனிந்து கைகுவித்துக் கண்களில் நீர் சுரந்து சலனமெலாம் தீர்ந்து சுகமயமாய்ச் சொன்மாலை வனைந்தணிந்து தானாகி நானாடல் வேண்டும்; அதற்குத் தருணம் இதுவாகும்; இத்தருணத்தில் குவலயத்தார் என்னைக் கண்டு அதிசயிக்குமாறு நீ எழுந்தருள வேண்டுமென்பது இப்பாட்டின் கருத்து. விருப்பு வெறுப்புக்களால் மனத்தின்கண் தோன்றி யலைக்கும் கவலைகள் ஒழிந்தாலன்றிக் களிப்பும் ஊக்கமும் உள்ளத்தில் நிலவாவாகலின், “கவலை எலாம் தவிர்ந்து மிகக் களிப்பினொடு” என்றும், அம் மன மகிழ்ச்சியால் அன்பு மிகுந்து கண்களில் நீர் சுரக்கக் கைகள் தலைமேல் குவித்து வாயால் துதித்தல் உண்டாகுதலின், “கைகுவித்துக் கண்களில் நீர் சுரந்திட” என்றும், இத்தகைய பத்தி நிலையால் மனச் சலனம் நீங்குதலின், “சவலை மனச் சலனமெலாம் தீர்ந்து” என்றும், சலனமில்லாத நீர்நிலை போலத் தெளிவும் அமைதியும் உள்ளத்தே நிலவுவது பற்றி, “சுகமயமாய்” என்றும் கூறுகின்றார். சவலை மனம் - திடமில்லாத மனம். திடமில்லாத பொழுது மனத்தில் சுழற்சியும் கலக்கமும் உண்டாதல் பற்றி, “சவலை மனச் சலனமெலாம் தீர்ந்து சுகமயமாய்” என இயம்புகின்றார். தானே தனக்கு முதலும், இடையும், கடையுமாய் எல்லாமாய் விளங்குதலால் கூத்தப் பெருமானை, “தானே தானாகி” எனவும், அத் தனிப் பெருங்கூத்து இன்ப மயமாய் விளங்குதலின், “இன்பத் தனிநடனம்” எனவும் சிறப்பிக்கின்றார். சொன்மாலை - சொற்களால் தொடுக்கப்படும் பாமாலை. இசை நலமும், பொருள் நலமும், சொன்னலமும் நிறைந்து விளங்குதல் பற்றி, “தவலருஞ்சீர்ச் சொன்மாலை” என்று புகல்கின்றார். தவல் - கெடுதல். சொன்மாலைகளைப் பல படியாக நினைந்து தொடுத்து அணிகின்ற பொழுது தொடுக்கும் உள்ளம் சிவத்தின் திருவருள் மயமாய் இன்பக் கிளர்ச்சியால் ஆட்டுவித்தலின், “தானாகி நான் ஆட” என்று சாற்றுகின்றார். நிலவுலகத்து மக்களினத்து ஒருவனாக இருந்தும் எனது இன்பத் தனி ஆடல் உலக மக்கட்கு வியப்பை உண்டு பண்ணுதலால், “குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்” என்று கூறுகின்றார். குற்றம் புரிவது உலகுயிர்கட்கு இயல்பு என்று எண்ணுகிற பொழுது, அவற்றின் மேல் வெறுப்பு உண்டாகாதாகலின், “குற்றமெலாம் குணமாகக் கொண்டவனே” என்று கூறுகின்றார்.
இதனால், மனக் கலக்கமின்றிச் சுகமயமாய்ச் சொன்மாலை வனைந்தணிந்து மனமகிழ்ச்சி மீதூர்ந்து உலகியல் மக்கள் கண்டு அதிசயிக்கும்படியாக நான் ஆனந்தக் கூத்தாடுமாறு அருள் புரிக என வடலூர் வள்ளல் கூத்தப் பெருமானை வேண்டியவாறாம். (11)
|