3814.

     மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே
          மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே
     இறப்பறியாத் திருநெறியில் என்னைவளர்த் தருளும்
          என்னுடைய நற்றாயே எந்தாயே நினது
     சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே
          சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப்
     பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய்
          பெருங்கருணை அரசேநீ தருந்தருணம் இதுவே.

உரை:

     மறத்தலில்லாத பேரறிஞர்களின் அறிவின்கண் விளங்கிப் பேரின்பத்தை அளிக்கின்ற சுகப் பொருளே; மயக்கம் இல்லாத ஞான நிலை முழுவதுமாக விளங்குகின்ற செம்பொருளே; இறத்தலில்லாத திருவருள் நெறியில் என்னைப் பேணி வளர்க்கின்ற என்னுடைய ஞானத்தாயே; ஞானத் தந்தையே! உன்னுடைய பெருமைகளை அறியாத உலகவரெல்லாம் அதனை நன்கறிந்து கொள்ளவும், ஞானிகளின் முடிமணியாகிய நின்னுடைய ஞான சித்திகள் எல்லாம் விளக்கமுறவும், பிறவாப் பேரின்ப வாழ்வு பெற்ற தவயோகிகள் கண்டு வியப்படையவும் பெருங் கருணை யுருவாகிய அருளரசன் எனப்படும் நீ என்பால் வந்து திருவருள் ஞானத்தை நல்குதற்கு ஏற்ற தருணம் இதுவாகும்; ஆதலால் அதனை அடியேனுக்குத் தந்தருளுக. எ.று.

     மறத்தலும் நினைத்தலுமாகிய குறைகளில்லாத ஞானிகளின் அறிவு பேரறிவு எனப்படுதலின், அப்பேரறிவு உடைய பெருமக்களின் அறிவு நெறியில் அவர்கட்கு அறிவானந்தத்தைப் பெருக நல்குவது பற்றிச் சிவனை, “மறப்பறியாப் பேரறிவில் வாய்த்த பெருஞ் சுகமே” என்றும், ஐயம் திரிபுகள் இல்லாத தெளிந்த ஞானநிலையில் அறிஞர்கள் அறிந்து இன்புறுமாறு சிறந்து விளங்குவது பற்றி, “மலைவறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே” என்றும் விதந்து கூறுகின்றார். மலைவு முதலிய ஐயம் திரிபுகளுக்கு இடமாகிய மனநிலை, எல்லாவற்றையும் குற்றமறவுணரும் பெரியோர்களின் அறிவு நிலை மலைவறியா நிலையாகும். அவர்கள் மெய்யுணர்ந்தோர் எனப்படுவதால் அவர்களுடைய மேன்மை யுணர்வின்கண் சிறந்து தோன்றுவது பற்றி, “செம்பொருளே” என்றும் சிறப்பிக்கின்றார். தூய்மையும் நோன்மையும் நிலைபேறும் உடைமை பற்றிச் சிவ பரம்பொருளைச் செம்பொருள் எனத் திருவள்ளுவர் குறிப்பது காண்க. “பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பதறிவு” எனத் திருக்குறள் ஓதுவது காண்க. பிறப்பிறப்புக்களை வென்றோங்கும் சிவநெறியை “இறப்பறியாத் திருநெறி” என்று குறிக்கின்றார். திருஞானசம்பந்தரும் இச்சிவநெறிக்குரிய தமிழ்ப் பாட்டுக்களைத் “திருநெறிய தமிழ்” என்று சிறப்பித்து அருளுகின்றார். இச் சிவநெறிக் கண்ணே தோன்றி வளர்ந்து அறிவு பெற்று விளக்கம் எய்தினமை தோன்ற, “திருநெறியில் என்னை வளர்த்தருளும் என்னுடைய நற்றாயே எந்தாயே” என்று போற்றுகின்றார். எந்தையே என்பது எந்தாய் என வந்தது. சிவநெறியை மேற்கொள்ளாதவருடைய கூட்டத்தை, “சிறப்பறியா உலகம்” என்றும், அவர்கள் சிவத்தின் சிறப்பறிந்து கொண்டால் தெளிவு பெறுவர் என்பதற்காக, “சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே” என்றும், சிவத்தின் திருவருட் செயல்கள் எல்லாம் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையால், “சித்தி எல்லாம் விளங்க” என்றும், சிவயோக சிவ ஞானத்தால் பிறப்பறுத்த பெருமக்கள் எம்போல்வார் திருவருள் ஞானம் பெறுவது கண்டு எங்களை ஊக்குதல் வேண்டும் என்பார், “பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்ப” என்றும் வேண்டுகின்றார்.

     இதனால், தமக்கருளும் திருவருள் ஞானத்தால் திருநெறி யறியாதவரும், திருவருள் ஞான சித்திகளைத் தெளியாதவரும், பிறவி வேரறுத்த பெரிய தவமுதல்வர்களும் அறிந்தும் கண்டும் வியந்தும் நலமுறுவர் எனத் தெரிவித்தவாறாம்.

     (4)