3815.

     முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்
          முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன்
     தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்
          தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ
     என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல்
          யானார்என் அறுவெதுமேல் என்னைமதிப் பவரார்
     பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம்
          பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவாறாமே.

உரை:

     முன்னைத் தவத்தால் எல்லா நற்பயனும் உண்டாம் என்று அறிஞர்கள் மொழிகின்றார்; அம்மொழியின் முடிவை என்னால் அறிய முடியவில்லை; எல்லாவற்றையும் செய்து முடிக்கும் முன்னோனாகிய நீ என்னைக் கடைக்கண் பார்த்து அருள்வாயாயின் எல்லாம் எனக்குண்டாம்; ஒப்பற்ற உன்னுடைய சுதந்தர நிலைமை உலகில் எனக்கு உரியதாகுமா; நீ அருள் புரியாயாயின் என்னுடைய உழைப்பால் என்ன பயன் விளையும்; யானார், யான் எத்தகையவன், என்னுடைய அறிவு யாதாம், என்னை எவர் மதிப்பார்; உனது திருவருள் இல்லையாயின் எவ்வளவு பொன் தந்தாலும் கருதிய பொருட் பயன் பெறுவது அரிதாம்; எச்செயலும் அம்பலத்தில் ஆடல் புரிகின்ற புண்ணிய மூர்த்தியாகிய நீ திருவுள்ளத்தில் எண்ணியது போலவே நடைபெறும். எ.று.

     மக்கள் பெறுகின்ற நலன்கள் எல்லாவற்றிற்கும் முன்னைத் தவமே காரணம் என்று அறிஞர் கூறுவதை எடுத்தோதுகின்றாராதலால், “முன் உழைப்பால் உறுமெனவே மொழிகின்றார்” என்றும், முன்னைத் தவத்துக்குக் காரணம் யாது என்பார்க்கு முன்னைத் தவமே என்று உறப்படின் அது அனவத்தை என்னும் குற்றமாய் முடிதலின், “மொழியின் முடிவறியேன்” என்றும் கூறுகின்றார். எல்லாச் செயல்கட்கும், செயல் புரிபவர்க்கும் முன்னோனாதலால் சிவனை, “எல்லாம் செய் முன்னவனே” என இயம்புகின்றார். இறைவன் திருவருள் நோக்கம் உண்டாயின் எல்லா நலன்களும் யாவர்க்கும் உளவாதலின், “நீ என் தன் உழைப் பார்த்து அருள்வாயேல் அனைத்தும் உண்டு” என்றும், உன்னைச் சுதந்தரன் என்றும் என்னைப் பரதந்திரன் என்றும் நூலோர் உரைத்தலால், “ஒரு நின் தனது சுதந்தரம் இங்கெனது சுதந்தரமாமோ” என்றும் கூறுகின்றார். பசுபாச பந்தங்களை யுடைமையால் ஆன்மாக்களைப் பரதந்திரம் என்று சிவாகமங்கள் உரைக்கின்றன. “கரைகழி பந்தம் பரதந்திரியம்” என்று ஞானாமிர்தம் என்னும் தமிழாகமம் உரைப்பது காண்க. பரதந்திரியாகிய எனது உழைப்பு நினதருளால் விளக்கமுறாதபடி என்னுடைய உழைப்பு பயனில்லாத உழைப்பாம் என்றங்கு, “இரங்கி அருளாயேல் என்னுழைப்பால் என்பயனோ” எனவும், சுதந்தர மில்லாமையால் என் ஆன்ம சத்தியும், ஆன்ம ஞானமும் பசுபாசங்கட்கு அடிமையாய்ப் பரதந்திரியப் படுதலால் சிறப்பிழந்து மழுங்குவதால் யானும் என்னறிவும் சிறுமை யுறுகின்றன; அதனால் சிவஞானத்தால் சுதந்தர ஞானமுடைய பெரியோர்களால் மதிப்பிழந்து போம் என்பாராய், “நீ இரங்கி அருளாயேல் யானார் என் அறிவெதுமேல் என்னை மதிப்பவரார்” எனவும் இசைக்கின்றார். “நானார் என்உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேன்” (கோத்தும்பி) என்று மணிவாசகப் பெருமான் உரைப்பது காண்க. மேலும் இவ்வுலகியலில் பொன்னால் எப்பொருளையும் செய்து கொள்ளலாம் என்பர்; ஆயினும் அச்செயல் தானும் நின் திருவருள் இல்லையாயின் எண்ணியவாறு நடைபெறாது என்றற்கு, “அருளிலையேல் பொன் உழைப்பால் பெறலும் அரிது” எனப் புகல்கின்றார். இனி உண்மையுழைப்பால் பொன்னும் பொருளும் எல்லாம் பெறலாம் என்பராயினும், அதுதானும் நின் திருவருள் இல்லையாயின் பெறல் அரிதாம் என்று இதற்கு வேறு பொருள் கூறுதலும் உண்டு. இவ்வாற்றால் புண்ணிய மூர்த்தியாகிய நீ எண்ணினால் எல்லாம் கைகூடும் என்பது விளக்கமுறுகிறது என்பார், “எல்லாம் பொது நடஞ்செய் புண்ணிய நீ எண்ணியவாறாமே” என மொழிகின்றார்.

                 இதனால், இறைவன் திருவருளால் உண்டாகும் நலன்களை வடலூர் வள்ளல் எடுத்துரைத்தவாறாம்.

     (5)