3817. மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ
தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ
தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ
நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது
நாயகனே பொதுவிளங்கும் நடராச பதியே
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.
உரை: பெரிய மன்னர்கள் சூழ்ந்திருக்கத் தலையில் மணி முடியை அணிந்து மண்ணுலகை ஆளவும் வானவருலகத்தை ஆளவும் நான் மனத்தின்கண் விரும்பியதில்லை; தேன்போல் இனிக்கின்ற சொற்களைப் பேசும் மகளிரைக் கூடி மகிழ விரும்பினதில்லை: இனிய சுவை மிக்க உணவுகளை நான் விரும்பியதில்லை; யார்க்கும் தீமைகளைச் செய்ததில்லை; இவ்வாற்றால் நான் ஒரு பாவமும் செய்தறியேன்; நன்னலம் நல்கும் செல்வமாகியவனே; என்னுடைய தலைவனே; அம்பலத்தில் விளக்கமுற ஆடுகின்ற நடராசனாகிய பதியே; எல்லாம் அறிந்தவனாகிய நீ மனவொருமை யில்லாதவர் போலிருப்பது ஏனோ? அது உனக்கு அழகாகாதே; என்னுடைய ஒருமையை நீ அறிந்துள்ளாய் அன்றோ. எ.று.
மண்ணுலகில் சிற்றரசரும் பேரரசருமாகப் பலர் இருத்தலால் அவர்களை, “மாநிருபாதிபர்” எனப் புகழ்கின்றார். பேரரசர்கள் முடி சூழ அரசு வீற்றிருக்கும் போது சிற்றரசர்கள் அவருடைய அவைக் களத்தில் வந்திருந்து சிறப்பித்தல் மரபாதலின், “மாநிருபாதிபர் சூழ மணிமுடி தான் பொறுத்தே மண்ணாள வானாள மனத்தில் நினைத்தேனோ” என்று கூறுகின்றார். இம்மரபு மண்ணாளும் மன்னருக்கே யன்றித் தேவருலக இந்திரன் முதலிய தேவ அரசர்களுக்கும் உண்டு என்பது விளங்க, “வானாள” என்று உரைக்கின்றார். தேன் ஒருவா மொழிச்சியர் - தேனினது இனிமை நீங்காத சொற்களைப் பேசும் மகளிர். மொழியுடையவரை மொழிச்சியர் என்று குறிக்கின்றார். மண்ணகத்தும் விண்ணகத்தும் வாழ்பவர் மகளிர் இன்பத்தை விரும்புவது இயல்பாதல் பற்றி, பெண்ணாசையை இங்கே எடுத்துப் பேசுகின்றார். திளைத்தல் - கூடுதல். தீஞ்சுவை - இனிய சுவை பொருந்திய உணவு வகைகள். தீமைகள் - தீச் செயல்கள். அருளுருவாகிய இறைவனால் எல்லா இன்பங்களும் குறைவற நிறைவது பற்றி இறைவனை, “நன்னிதியே” என்று நவில்கின்றார். பொது - தில்லையம்பலம். மனத்தின்கண் ஒருமையுணர்வு இல்லாதவர் செய்யும் செயல் வகை யறியாது திகைப்பது போல இறைவன் வாளா இருக்கின்றான் என்பாராய், “ஒருமையிலர் போல் நீ இருக்கின்றாய் அழகோ” என்றும், எல்லாம் அறிந்த பெருமானாகிய நீ என்னுடைய மனவொருமையை அறியா தொழிந்தனையோ என வினவுவாராய், “என் ஒருமை அறியாயோ” என்றும் முறையிடுகின்றார்.
இதனால், ஒரு பாவமும் அறியாத என்பால் நீ பராமுகமாக இருப்பது முறையாகாது என்று வடலூர் வள்ளல் முறையிட்டவாறாம். (7)
|