3818. பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பேர்
ஆசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
தேவிசிவ காமவல்லி மகிழுமண வாளா
தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே.
உரை: உமாதேவியாகிய சிவகாமவல்லி மனம் மகிழுமாறு வீற்றிருக்கின்ற மணவாளப் பெருமானே! பாவியாகிய என்னுடைய மனமெனும் குரங்கு ஆடுகின்ற ஆட்டத்தைப் பார்க்க முடியவில்லை; என் ஊரையும் என் பொருளையும் பிறர்பால் எனக்கிருக்கும் பற்றுக்களையும் ஒழித்து விட்டேன்; என்னுடைய உயிர் உடல் பொருள் மூன்றையும் உனக்கே உரிமை செய்து விட்டு, நின்னுடைய திருவருளின்கண் பெருத்த ஆசையுடையனாய், உன்பால் அதைப் பெறுதற்கு அடுத்தடுத்து முயன்று கொண்டிருக்கின்றேன்; என்னைக் கூவி யழைத்து ஆளாகக் கொள்ளுதற்குத் திருவுளம் கொள்ளாயோ? உன்னுடைய திருக்குறிப்பை அறியேனாய்ப் பலகாலும் உன் திருப்பெயரைச் சொல்லிச் சொல்லி உள்ளம் சோர்கின்றேன்; உன்னுடைய விளக்கம் நிறைந்த திருவருள் ஞானமாகிய அமுதத்தை எனக்கு நல்குதற்கு இதுவே தருணமாகும். எ.று.
உமை யமர்ந்து விளங்கும் ஒரு பெருங் கடவுளாதலின், “தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா” என்று போற்றுகின்றார். ஒரு பொருளிலும் நிலையுறாது கண் முதலிய ஐம்பொறிகளிடத்து உளவாகும் ஐவகை ஆசைகளால் பொருள்கள் தோறும் அலையும் இயல்புடையதாதலின் மனத்தைக் “குரங்கு” என்றும், அதனுடைய இடையறாது ஓடியலையும் இயல்பு பற்றி “மனக்குரங் காட்டம்” என்றும், அதனை யடக்கி ஒருமையுற நிறுத்த முடியாமை தோன்ற, “குரங்காட்டம் பார்க்க முடியாதே” என்றும் பரிந்துரைக்கின்றார். ஊரையும் உறையும் வீட்டையும், தன்பாலுள்ள பொருளையும், உற்றார் உறவினர்பால் உண்டாகிய உறவையும் நட்பையும் துறந்து நிற்கின்றமை தோன்ற, “பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்” என்று பகர்கின்றார். இவற்றின் வேறாக உள்ள தம்முடைய உயிரின்பாலும் உடம்பின்பாலும் உடம்பினின்றும் நீங்காத பொருளின்பாலும் ஆசையறுத்து இறைவன்பால் அன்பு ஒன்றே கொண்டு இருக்கின்றமை புலப்பட, “ஆவி உடல் பொருளை உன்பாற் கொடுத்தேன்” என்றும், “உன் அருட் பேராசை மயமாகி உனை யடுத்து முயல்கின்றேன்” என்றும் உரைக்கின்றார். தம்முடைய நினைவு மொழி செயல் ஆகிய மூன்றும் இறைவன் திருவருளின்பால் உண்டாகிய அன்பு மயமாய் இருப்பதைப் புலப்படுத்தற்கு, “உன் அருட் பேராசை மயமாகி” எனவும், திருவருள் ஞானத்தைப் பெறுதற்காக முயலும் திறத்தை, “உனை யடுத்து முயல்கின்றேன்” எனவும், என்னுடைய செயல்களால் எனது ஆர்வ நிலையையுணர்ந்து என்னைக் கூவி ஆட்கொள்ள வேண்டும்; அதனைச் செய்வதற்கு உன் திருவுளம் கொள்கிறாயோ? இல்லையோ? உன்னுடைய திருவுளப் பாங்கினை அறிகிலேன் என்பாராய், “கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பறியேன்” எனவும், அறியாமையால் பலகாலும் பலமுறையும் எனது மனநிலையை எடுத்தோதிச் சோர்வடைகின்றேன் என்பாராய், “பற்பலகால் கூறி இளைக்கின்றேன்” எனவும் இயம்புகின்றார். “கொள்ளுங் கில்லெனை அன்பரிற் கூய்ப்பணி கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்” (சதகம்) என்று மணிவாசகப் பெருமான் இவ்வாறு விண்ணப்பிப்பது காண்க. நீர் வேட்கையுற்றார்க்கு அது தீரும் சமயமறிந்து நீரை அளிப்பது போல எனது ஆர்வநிலையையும் முயற்சியையும் அறிந்து அளித்தற்கு இது தக்க தருணமாதலால், உனது திருவருள் ஞானமாகிய அமுதத்தைத் தந்தருளுவாயாக என வேண்டலுற்று, “தெருள் நிறை வானமுதளிக்கும் தருணம் இதுதானே” என்று முறையிடுகின்றார். திருவருள் ஞானம், தெளிவும் குறைவிலா நிறைவும் உடையதாகலின் அதனை, “தெருள் நிறை வானமுது” என்று சிறப்பிக்கின்றார்.
இதனால், திருவருள் ஞானத்தைப் பெறுதற்குரிய தருணம் இதுவென வடலூர் வள்ளல் இறைவன்பால் முறையிட்டவாறாம். (8)
|