3823. பிரிந்தினிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப்
பேசினும் நெய்விடுந் தீப்போல்
எரிந்துளங் கலங்கி மயங்கல்கண் டிலையோ
எங்கணும் கண்ணுடை எந்தாய்
புரிந்தசிற் பொதுவில் திருநடம் புரியும்
புண்ணியா என்னுயிர்த் துணைவா
கரந்திடா துறுதற் கிதுதகு தருணம்
கலந்தருள் கலந்தருள் எனையே.
உரை: எவ்விடத்தும் பரந்து விளங்குகின்ற கண்களையுடைய பெருமானே! யாவராலும் விரும்பப்படுகின்ற ஞான சபையில் திருக் கூத்தாடுகின்ற புண்ணிய மூர்த்தியே! என் உயிர்க்குத் துணைவனே! இனிச் சிறிது பொழுதும் உன்னைப் பிரிந்திருக்க வல்லேனல்லேன்; பிரிவை நினைந்து பேசினும் நெய் பெய்த தீயைப் போல என் மனம் எரிந்து கலக்கமுற்று மயங்குவதை நீ காணா யல்லையோ; என் கண்ணிற்படாது மறைதலின்றி என்னுள்ளத்தில் எழுந்தருளுதற்கு இது தக்க தருணமாதலால் என்னுட் கலந்து கொள்வாயாக. எ.று.
திருவருள் இன்பத்தை நாடியெய்தி அதனோடு கூடி மகிழ்கின்றவராதலால் வடலூர் வள்ளல், “இனிப் பிரிந்து சிறிதும் தரிக்கலேன்” என்று கூறுகின்றார். பிரிதலை எண்ணினாலும் பேசினாலும் நெய் பெய்த தீ கொழுந்து விட்டெரிவது போல் உள்ளம் வெய்துற்று வருந்துவதை விளக்குவாராய், “பிரிவைப் பேசினும் நெய் விடுந் தீப் போல் எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ” என்று இசைக்கின்றார். எங்கும் எல்லாப் பொருளிலும் கலந்திருந்து நிகழ்வன அனைத்தையும் கண்டு கொள்ளுதலால் இறைவனை, “எங்கணும் கண்ணுடை எந்தாய்” எனவும், யாவராலும் விரும்பிப் போற்றப்படுவது குறித்து ஞான சபையை, “புரிந்த சிற்பொது” எனவும், சிவ புண்ணியத்தின் பிழம்பாய்ப் பிறங்குதலால், “புண்ணியா” எனவும், உயிரோடு ஒன்றாய்க் கலந்து உற்ற விடத்து உணர்வு நல்கி உய்வித்தல் பற்றி, “என்னுயிர்த் தலைவா” எனவும் போற்றுகின்றார். தம்முடைய மனக் கண்ணிற்கும் ஓரொருகால் தோன்றாது மறைந்து நிற்றலை நினைந்து, “கரந்திடாது உறுதற்கு இது தகு தருணம்” என இயம்புகிறார். தகு தருணம் - தக்க சமயம்.
இதனால், தமது மனக் கண்ணுக்கும் அறிவுக் கண்ணுக்கும் விளங்கத் தோன்றுமாறு தமைக் காத்தருள வேண்டுமென வடலூர் வள்ளல் முறையிட்டவாறாம். (2)
|