3824.

     மேலைஏ காந்தவெளியிலே நடஞ்செய்
          மெய்யனே ஐயனே எனக்கு
     மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்
          வல்லனே நல்லனே அருட்செங்
     கோலையே நடத்தும் இறைவனே ஓர்எண்
          குணத்தனே இனிச்சகிப் பறியேன்
     காலையே தருதற் கிதுதகு தருணம்
          கலந்தருள் கலந்தருள் எனையே.

உரை:

     தத்துவங்கட்கு மேலாகிய பரநாதம் எனப்படும் ஏகாந்த வெளியில் ஞான நடஞ் செய்கின்ற மெய்யனே! ஐயனே! எனக்குத் திருவருள் ஞானமாகிய மாலையை அணிந்து மகிழ்வித்த பெருமானே! எல்லாம் வல்லவனே! நன்மையே உருவானவனே! திருவருட் செங்கோலைச் செலுத்தும் இறைவனே! ஒப்பற்ற எண் குணங்களையுடைய பெருமானே! இனி நின்னைப் பிரிந்து உறைவதைப் பொறுக்கமாட்டேன்; ஆதலால் நின் திருவருளைத் தருதற்கு இது தக்க காலமாதலால் என்பால் எழுந்தருளி என்னுட் கலந்து கொள்வாயாக. எ.று.

     சுத்த மாயா மண்டலத்துக் கப்பால் விளங்கும் பரநாத வெளி சிவம் ஒன்றே தனித்து விளங்கும் பெருநிலையமாதலால் அங்கே ஞான நடனம் புரிகின்ற தன்மை நோக்கிச் சிவனை, “மேலை ஏகாந்த வெளியிலே நடஞ் செய் மெய்யனே” என்று போற்றுகின்றார். ஏகாந்த வெளி - பரநாத வெளி. இதனை ஞானாகாச வெளி என்பதுமுண்டு. மெய்யன் - மெய்ம்மை வடிவானவன். ஐயன் - தலைவன். மகிழ்நன் - மகிழ்ச்சி நல்குபவன். எல்லா வுலகங்கட்கும் ஆங்காங்குள்ள உயிர்கட்கும் அருளரசு புரிகின்றானாதலால் இறைவனை, “அருட் செங்கோலையே நடத்தும் இறைவனே” என்று இசைக்கின்றார். எண் குணத்தன், தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல் முதலிய எட்டு வகைக் குணங்களையுடையவன். “எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” என்று திருவள்ளுவரும் குறித்துரைப்பது காண்க. சகித்தல், சகிப்பு என வந்தது. சகிப்பு - பொறுத்தல்.

     இதனால், எண்குணத்தனாகிய இறைவன் திருவருள் கூட்டத்தைப் பிரிந்திருக்க மாட்டாமை தெரிவித்தவாறாம்.

     (3)