3825. பண்டுகொண் டெனைத்தான் பிழைகுறி யாத
பண்பனே திருச்சிற்றம் பலத்தே
தொண்டுகொண் டடியர் களிக்கநின் றாடும்
தூயனே நேயனே பிரமன்
விண்டுகண் டறியா முடிஅடி எனக்கே
விளங்குறக் காட்டிய விமலா
கண்டுகொண் டுறுதற் கிதுதகு தருணம்
கலந்தருள் கலந்தருள் எனையே.
உரை: எளியவனாகிய என்னை முன்னமே ஆட்கொண்டு யான் செய்த குற்றங்களைப் பொருளாகக் கொள்ளாத நற்பண்புடையவனே; திருச்சிற்றம்பலத்தின்கண் தொண்டு புரிகின்ற அடியார்கள் கண்டு மனம் களிக்க நின்றாடுகின்ற தூயவனே; நேயப் பொருளாகுபவனே; பிரமனும் திருமாலும் காண முடியா தொழிந்த திருமுடியையும் திருவடியையும் எனக்கு விளக்கமாகக் காட்டி யருளிய விமலனே; உன்னைக் கண்டு கொண்டு இன்புறுதற்கு இது தக்க தருணமாதலால் என்னைக் கலந்தருளுவாயாக. எ.று.
இளமைப் போதிலேயே தம்மைச் சிவபெருமான் ஆளாகக் கொண்டமை பற்றி, “எனைத் தான் பண்டு கொண்டு” என்றும், ஆளாகிய தாம் செய்த பிழைகளைப் பொறுத் தருளினமை புலப்பட, “பிழை குறியாத பண்பனே” என்றும் பரவுகின்றார். சிவஞானிகளாகிய தொண்டர்கள் நேரிற் கண்டு இன்புறுமாறு அம்பலத்தின்கண் ஆடுகின்றமை விளங்க, “திருச்சிற்றம்பலத்தே தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்றாடும் தூயனே” என்றும், ஞானத்தால் உணரப் படுவது பற்றி, “நேயனே” என்றும் புகழ்கின்றார். ஞானத்தால் அறியப்படுவது நேயம். ஞானப் பொருளாவது பற்றிச் சிவனை “நேயன்” என்று கூறுகின்றார். பிரமனும் திருமாலும் ஒருகால் சிவனுடைய திருமுடியையும் திருவடியையும் காண முயன்று மாட்டா தொழிந்தனரெனப் புராணம் கூறவும், தாம் அவ்விரண்டனையும் கண்டு மகிழ்ந்தமை புலப்பட, “பிரமன் விண்டு கண்டறியா முடி அடி எனக்கே விளங்குறக் காட்டிய விமலா” என்று வியந்து கூறுகின்றார். விமலன் - மலமில்லாத தூயவன். சிவ பரம்பொருளைப் புறக் கண்களாலும் அகக் கண்களாலும் கண்டு மகிழ விழைகின்றாராதலால் வடலூர் வள்ளல், “கண்டு கொண்டு உறுதற்கு இது தகு தருணம் கலந்தருள் கலந்தருள் எனையே” என்று வேண்டுகிறார்.
இதனால், சிவ பரம்பொருளை அகம் புறமெனும் இரு கண்களாலும் கண்டு மகிழ்தற்குத் தம்பாற் போந்து தம்முட் கலந்தருளுமாறு வேண்டியவாறாம். (4)
|