3826. தனித்துணை எனும்என் தந்தையே தாயே
தலைவனே சிற்சபை தனிலே
இனித்ததெள் அமுதே என்னுயிர்க் குயிரே
என்இரு கண்ணுள்மா மணியே
அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே
அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
கனித்துணை தருதற் கிதுதகு தருணம்
கலந்தருள் கலந்தருள் எனையே.
உரை: தனித் துணை யெனச் சான்றோரால் புகழப்படும் என்னுடைய தந்தையே, தாயே! எனக்குத் தலைவனே! ஞான சபையில் விளங்குகின்ற இனிமை மிக்க தெளிந்த அமுதம் போன்றவனே! என் உயிர்க் குயிராயவனே! என்னுடைய இரண்டு கண்களிலும் உள்ள கரிய மணி போன்றவனே! என்பாலுள்ள அனித்தத் தன்மையைப் போக்கி ஆண்டருளிய என் குருபரனே! அண்ணலே! இனியும் உன்னுடைய பிரிவைப் பொறுக்க மாட்டேன்; அருள் ஞானமாகிய முதிர்ந்த துணையை எனக்கு நீ நல்குதற்கு இது தக்க தருணமாதலால் என்னுட் கலந்து அருள் இன்பம் தருவாயாக. எ.று.
“தமியேன் தனி நீக்கும் தனித் துணையே” என்றும், “தனித் துணை நீ நிற்க” என்றும் (நீத்தல் : 38 - 39) மாணிக்கவாசகப் பெருமான் புகழ்ந்தோதுவது பற்றி, “தனித் துணை” என்றும், “என் தந்தையே” என்றும் பராவுகின்றார். ஞான சபையில் ஞான மூர்த்தியாய் ஞான நெறியில் தரிசிப்பார்க்கு ஞான இன்பத்தை நல்குவதால், “சிற்சபை தனிலே இனித்த தெள்ளமுதே” என்று போற்றுகின்றார். நிலையில்லாத உலகியல் வாழ்விலிருந்து நீக்கி அதன்பால் பற்று கொள்ளாதவாறு ஞான வுரை நல்கி ஆண்டருளியது பற்றிச் சிவபெருமானை, “அனித்தமே நீக்கி ஆண்ட என் குருவே” என்று துதிக்கின்றார். ஞானத்தால் வீடு பேறு எய்துதலின் சிவனருளும் சிவஞானம் கனிந்து முதிர்ந்து இன்பம் தரும் துணை என்பாராய், “கனித் துணை” என்று சிறப்பிக்கின்றார்.
இதனால், சிவஞானமாகிய முதிர்ந்து கனிந்த துணையை நல்குமாறு வேண்டியவாறாம். (5)
|