3827.

     துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே
          சோதியுட் சோதியே அழியா
     இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை
          ஈன்றநல் தந்தையே தாயே
     அன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே
          அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
     பொன்பதந் தருதற் கிதுதகு தருணம்
          புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

உரை:

     உலக வாழ்வில் உளவாகும் துன்பங்கள் எல்லாவற்றையும் நீக்குகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கும் சிவ ஒளிக்குள் சிறந்த ஒளிப் பொருளாய்த் திகழ்பவனே! கெடாத இன்பங்கள் எல்லாவற்றையும் அளித்து ஆதரிக்கும் இறைவனே! என்னைப் பெற்றுப் புறந்தருகின்ற நல்ல தந்தையும் தாயுமானவனே! அன்பே உருவாய் குறைவற நிறைந்த பூரணனே! அண்ணலே! இனி உன்னுடைய பிரிவால் உண்டாகும் துன்பத்தைப் பொறுக்க மாட்டேன்; உன்னுடைய அழகிய திருவடி ஞானத்தை எனக்குத் தருதற்கு இது தக்க தருணமாதலால் என்பால் வந்து கலந்தருளுக. எ.று.

     உலக வாழ்வில் மனம் மொழி மெய்களால் உண்டாகும் வினைத் துன்பங்கள் பலவாதலின், “துன்பெலாம்” என்றும், அவை ஞான சபையின் காட்சியால் எய்தும் ஞான ஒளி கொண்டு நீங்குதலின் “துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம்பலம்” என்றும் குறிக்கின்றார். திருச்சிற்றம்பலத்தில் தோன்றும் தூல ஒளிக்குச் சூக்குமமாய் நிலவும் சிவவொளியை, “சோதியுட் சோதி” என்று குறிக்கின்றார். இறைவன் அருளும் இன்பம் சிவஞானப் பேரின்பமாதலின் அதனை, “அழியா இன்பம்” என்று சிறப்பிக்கின்றார். உலகில் பிறந்து ஞானம் பெற்று உய்தி பெறுதற்குக் காரணமாகிய தலைவனாதலால் இறைவனை, “என்னை ஈன்ற நல்தந்தையே தாயே” என்று துதிக்கின்றார். அன்பே சிவத்தின் உருவாதலின் “அன்பெலாமாகி நிறைந்ததோர் நிறைவே” எனப் பராவுகின்றார். அன்பே சிவம் என்னும் பொழுது சிவபரம்பொருள் என்பது அன்பே முற்றவும் நிறைந்த முழுப் பொருள் என்பது தோன்ற, “நிறைந்ததோர் நிறைவே” என்று கூறுகின்றார். பொன் பதம் - அழகிய ஞான மயமாகிய திருவடி. இது திருவடி ஞான மெனவும் வழங்கும். திருவடி ஞானம் குறைவின்றி நிறைந்த இன்ப ஞானமாதலின் அதனை இப்பொழுதே என்பால் வந்து கலந்து தந்தருளுக என்பாராய், “பொன்பதம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே” என வேண்டுகின்றார்.

     இதனால், திருவடி இன்பஞானத்தை எனக்கு நல்குதற்கு இது தக்க தருணம் என்று ஓதி என்னோடு கலந்து அதனைத் தந்தருளுக என விண்ணப்பித்தவாறாம்.

     (6)