3828. ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்
தென்னைஆட் கொண்டெனை உவந்தே
ஓதும்இன் மொழியால் பாடவே பணித்த
ஒருவனே என்னுயிர்த் துணைவா
வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
விளங்கிய விமலனே ஞான
போதகம் தருதற் கிதுதகு தருணம்
புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
உரை: ஓதப்படும் வேதங்களும் அவற்றின் பயனாகிய வைதிக ஞானமுமாகிய அம்பலத்தின்கண் விளங்குகின்ற விமலனே! எதனையும் நன்கறியாத பேதைப் பருவத்தில் என்னை ஆட்கொண்டு என்பால் அன்புற்று யான் பேசுகின்ற இனிய சொற்களால் பாடுமாறு பணித்தருளிய ஒப்பற்ற தலைவனே! என் உயிர்த் துணைவனே! திருவருள் ஞானத்தை எனக்கு நல்குதற்கு இது தக்க தருணமாதலால் என்பால் வந்து என்னுட் கலந்தருளுக. எ.று.
வேதங்களும் வேத ஞானப் பயனும் அம்பலத்தாடும் சிவபரம் பொருளையே பொருளாகக் கொண்டு விளங்குதலால், “வேதமும் பயனுமாகிய பொதுவில் விளங்கிய விமலனே” என்று விளம்புகின்றார். அறிவறியாத மிக்க இளம் பருவத்தே தமக்குச் சிவப் பற்றும் சிவத் தொண்டும் அமைந்தமை விளங்க, “ஏதும் ஒன்றறியாப் பேதையாம் பருவத்து என்னை ஆட்கொண்டு எனை உவந்து” எனவும், அக் காலத்தேயே இனிய தமிழ் பாடும் திறத்தை உண்டாக்கியது பற்றி, “ஓதும் இன்மொழியால் பாடவே பணித்த ஒருவனே” எனவும் இசைக்கின்றார். ஞான போதம் என்பது ஞான போதகம் என வந்தது. போதம் - போதனை.
இதனால், தம்முட் கலந்து சிவஞானத்தைப் போதிக்குமாறு இறைவனை வேண்டியவாறாம். (7)
|