3829.

     எண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத்
          திசைந்தபேர் இன்பமே யான்தான்
     பண்ணிய தவமே தவத்துறும் பலனே
          பலத்தினால் கிடைத்தஎன் பதியே
     தண்ணிய மதியே மதிமுடி அரசே
          தனித்தசிற் சபைநடத் தமுதே
     புண்ணியம் அளித்தற் கிதுதகு தருணம்
          புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

உரை:

     குளிர்ந்த ஞான மதி போன்றவனே; பிறைச் சந்திரனைத் திருமுடியில் சூடிக் கொண்டிருக்கின்ற அருளரசே! ஒப்பற்ற ஞான சபையில் நடம் புரிகின்ற ஞான வமுதமாகியவனே! எண்ணுகின்ற கருவியாகிய எனது மனதிற்குள் எண்ண வடிவாய் இருப்பவனே! எண்ணுமிடத்து அவ்வெண்ணத்தின்கண் சுரக்கின்ற இன்பமாக இருப்பவனே! யான் செய்த தவ உருவாகியவனே! அத்தவத்தால் விளையும் பயனாகியவனே! அத்தவப் பயனால் எனக்குக் கிடைத்தருளிய சிவபதியே! அவரவர் செய்யும் சிவ புண்ணியப் பயனாக எய்தும் சிவ போகத்தை எனக்களிக்க இது தக்க தருணமாதலால் என்பால் வந்து என்னுட் கலந்தருளுக. எ.று.

     சிவயோகிகட்கு அவர்களுடைய யோக நெறியில் துவாத சாந்தத்தில் அமுத சந்திர வடிவில் காட்சி தருதலின் சிவனை, “தண்ணிய மதியே” என்று குறிக்கின்றார். ஞான சபைக்கு நிகராக வேறு சபையில்லாமை தோன்ற அதனை, “தனித்த சிற்சபை” என்றும், அங்கே நிலவுகின்ற ஞான நடனம் ஞானவான்களுக்குப் பேரின்பம் தருதலின், “தனித்த சிற்சபை நடத்து அமுதே” என்றும் போற்றுகின்றார். காணும் கண் போலவும், கேட்கும் காது போலவும், நினைக்கும் கருவி மனமாதலின் அம்மனத்துக்கு உள்ளூறு பொருளாய் எண்ணத்தைத் தூண்டும் காரணப் பொருளாய் விளங்குதலின் இறைவனை, “எண்ணிய எனதுள் எண்ணமே” எனவும், எண்ண மிகுதியால் உண்டாகும் தெளிவின்கண் பிறக்கும் இன்பம் திருவருள் மயமாதலால், “எண்ணத்து இசைந்த பேரின்பமே” எனவும் இயம்புகின்றார். தவமாவது நல்ல பொருட் பயன் கருதிச் செய்யும் தூய முயற்சியாகும். அம்முயற்சி கைகூடும் பொருட்டுச் சிவபரம்பொருள் உள்ளிருந்து ஊக்குதலின், “யான் தான் பண்ணிய தவமே”என்றும், அத்தவ முயற்சியில் எய்துகின்ற நற்காட்சியும் சிவ ஞானமாதலின் அதனை, “தவத்துறும் பலனே” என்றும், தவத்தால் எய்தும் சிவஞானத்தால் தவம் செய்வார்க்குக் காட்சி படும் முதல்வனாதலின் சிவபெருமானைத் “தவ பலத்தினால் கிடைத்த என் பதியே” என்றும் புகழ்கின்றார். சிவ புண்ணியத்தால் எய்தும் சிவபோகத்தைப் பெறுதற்குத் தாம் சமைந்திருக்கின்றமை புலப்பட, “புண்ணியம் அளித்தற்கு இது தகு தருணம் புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே” என்று வேண்டுகின்றார்.

     இதனால், சிவ புண்ணியப் பயனாகச் சிவபோகத்தைத் தமக்கு அளிக்குமாறு முறையிட்டவாறாம்.

     (8)