3830.

     மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே
          மந்திர மேஒளிர் மணியே
     நிலைப்பட எனைஅன் றாண்டருள் அளித்த
          நேயனே தாயனை யவனே
     பலப்படு பொன்னம் பலத்திலே நடஞ்செய்
          பரமனே பரமசிற் சுகந்தான்
     புலப்படத் தருதற் கிதுதகு தருணம்
          புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

உரை:

     மும்மலங்களாகிய பகைப் பொருட்கள் விளைவிக்கும் பிறவி நோயைப் போக்குதற்கு அமைந்த ஒப்பற்ற மருந்தும், மந்திரமும், ஒளிர்கின்ற மணியுமாய் விளங்குபவனே! மிக்க இளமைப் பருவத்திலிருந்த என்னை அன்றொரு நாள் அருள் நெறியின்கண் நிலைபெறுமாறு ஆட்கொண்டு திருவருள் ஞானத்தை அளித்தருளிய அன்பனே! எனக்குத் தாய் போன்றவனே! பயன் தருகின்ற பொன்னம்பலத்துத் திருநடஞ் செய்கின்ற பரமசிவனே! மேலான ஞான வின்பம் எனக்குப் புலப்படப் பெறுதற்கு இது தக்க தருணமாதலால் என்னைக் கலந்தருளுக. எ.று.

     ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் ஆன்மாவைப் பிணித்து நோய் செய்வது பற்றி அவற்றை “மலப் பகை” என்று குறிக்கின்றார். நோய் நீக்குதற்குப் பண்டையோர் மணி, மந்திரம், மருந்து என்ற மூன்று நெறியை மேற்கொண்டிருந்தனராதலால் அவ்வுண்மை விளங்க, “மலப் பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே மந்திரமே “ஒளிர் மணியே” என்று கூறுகின்றார். மணியாவது அக்குமணி என்றும், மந்திரமாவது, திருவைந்தெழுத்து என்றும், மருந்தாவது திருநீறு என்றும் உரைப்பர். இம்மூன்றும் சிவனுக்கே உரியவையாதலால், “மருந்தே மந்திரமே மணியே” என்று முறையாகக் கூறுகின்றார். மிக்க இளம் பருவத்தே தம்மை ஆட்கொண்ட வரலாற்றை முன்னே கூறியதால் இங்கே “அன்று” எனக் குறிக்கின்றார். பேதைப் பருவத்தில் போதித்தது நெஞ்சின்கண் என்றும் நிலைபெறுமாறு அருள் ஞானத்தை அருளிய சிறப்புத் தோன்ற, “நிலைப்பட எனை அன்று ஆண்டருள் அளித்த நேயனே” என்று இயம்புகின்றார். தொடக்கத்தேயே தமக்குத் தாய் போல் தலையளி செய்தமை பற்றி, “தாயனை யவனே” என்று சாற்றுகின்றார். வேண்டுவார் வேண்டும் வரங்களை நல்கும் அருள் நிலையமாதலால் திருச்சிற்றம்பலத்தை, “பலப்படு பொன்னம்பலம்” என்று புகழ்கின்றார். உயிர்கள் பெறுதற்குரிய இன்பங்களில் சிவஞான ஆனந்தத்திலும் மேலானது வேறின்மையின் அதனை, “பரம சிற்சுகம்” என்று கூறுகின்றார். சிவஞானானந்தம் தமக்கு இனிது விளங்கி இன்பம் செய்ய வேண்டும் என்பாராய், “பரம சிற்சுகந்தான் புலப்படத் தருதற்கு இது தகு தருணம்” என்று எடுத்துரைக்கின்றார்.

     இதனால், பரம சிற்சுகத்தை இனிது விளங்கத் தந்தருள வேண்டுமென விண்ணப்பித்தவாறாம்.

     (9)