3831.

     களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த
          கற்பகத் தீஞ்சுவைக் கனியே
     வெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே
          விளங்கும்ஓர் விளக்கமே எனக்கே
     ஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில்
          ஒருவனே இனிப்பிரி வாற்றேன்
     புளிப்பற இனித்தற் கிதுதகு தருணம்
          புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

உரை:

     திருவருளில் கலந்து மகிழ்வுறும் அடியவனாகிய எனக்குக் கைமேல் கிடைத்த கற்பகத்தின் இனிய சுவை பொருந்திய கனிபோல்பவனே! வெளியில் உலகெங்கும் ஒளிர்கின்ற தூல விளக்கமே! அவரவர் மனத்தின்கண் நின்று திகழும் ஞான விளக்கமே! சிறிதும் மறைப்பின்றி அந்நாளிலேயே எனக்கு ஞானமளித்த ஞான சபையில் எழுந்தருளும் ஒப்பற்ற பெருமானே! இனியும் நின் பிரிவால் உளதாகும் துன்பத்தைப் பொறுக்க மாட்டேன்; உனது திருவருளின்பம் புளித்தலின்றி இனிமை மிக்கு விளங்குதற்கு இது தக்க தருணமாதலால் என்பால் வந்து என்னுட் கலந்தருளுக. எ.று.

     திருவருள் ஞான வின்பத்தில் தோய்ந்து மகிழ்ச்சி மிகுகின்றாராதலால் வடலூர் வள்ளல் சிவபெருமானை, “களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த கற்பகத் தீஞ்சுவைக் கனியே” என்று சிறப்பிக்கின்றார். இனிமைச் சுவை மிக்கதாகிய கற்பகக் கனி தேவர் உலகத்தில் இருப்பதாயினும் பெறுதற்கரிய அதனைக் கையிலே பெற்றாற் போலச் சிவஞான இன்பம் தனக்கு எய்த வுள்ளமை இனிது விளங்க, “அடியேன் கையிலே கிடைத்த கற்பகத் தீஞ்சுவைக் கனியே” என்று கூறுகின்றார். புறத்தே விளங்குகின்ற பூதவொளியும் அவரவர் அகத்தே விளங்கும் உள்ளொளியாகிய ஞான ஒளியும் சிவமே என்று வற்புறுத்தற்கு, “வெளிப் புறத்தோங்கும் விளக்கமே அகத்தே விளங்கும் ஓர் விளக்கமே” என்று விளக்குகின்றார். இளமைப் போதில் பக்குவமின்மை நோக்கி மறைக்காமல் திருவருள் ஞானத்தைத் தமக்களித்தமை பற்றி, “எனக்கு ஒளிப்பிலாது அன்றே அளித்த சிற்பொதுவில் ஒருவனே” என்று தெரிவிக்கின்றார். ஒளிப்பு - மறைத்தல். புளிப்பு - வெறுத்தல். இளமைக்கண் பெற்ற திருவருள் ஞானத்தை நான் நன்கு சுவைத்தற்கு இது தக்க தருணமாதலால் என்பாற் போந்து என்னைக் கலந்தருளுக என வற்புறுத்துவாராய், “இனிப் பிரிவு ஆற்றேன்” எனவும், “புளிப்பற இனித்தற்கு இது தகு தருணம் புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே” எனவும் இயம்புகின்றார்.

     இதனால், சிவஞான ஆனந்தத்தை இனிது சுவைத்து மகிழ்தற்குரிய பக்குவம் தமக்கு எய்தினமை தெரிவிப்பாராய் வடலூர் வள்ளல் விண்ணப்பம் செய்தவாறாம்.

     (11)