3833. இந்தார் அருளமுதம் யானருத்தல் வேண்டுமிங்கே
நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே
கோவே எனது குருவே எனையாண்ட
தேவே கதவைத் திற.
உரை: கெடாத ஞான மணி விளக்கமாகியவனே! ஞான சபையில் எழுந்தருளும் எந்தையே! எல்லா வுலகுகட்கும் தலைவனே! என்னை யுடைய குருவே! என்னை இளமைப் போதிலே ஆண்டு கொண்ட தேவனே! யோகாந்தத்தில் தோன்றிப் பெருகும் நினது திருவருள் ஞான அமுதத்தை, இவ்வுலகில் இருந்தே யான் பருகி இன்புற வேண்டுமாதலால் உனது ஞானக் கதவைத் திறந்தருளுக. எ.று.
நந்துதல் - கெடுதல். உலகில் காணப்படும் மணி வகைகள், ஒரு காலத்தே கெடும் இயல்பினவாதலால் சிவபெருமானை, “நந்தா மணி விளக்கு” என்றும், ஞான சபையில் எழுந்தருளுவது பற்றி, “ஞான சபை எந்தாய்” என்றும், எல்லா வுலகுகளையும் படைத்தளிக்கும் முதல்வனாதலால், “கோவே” என்றும், குருபரனாய் எழுந்தருளி ஞானம் நல்குவதால் “எனது குருவே” என்றும், தம்மை இளமைப் பருவத்தேயே ஆண்டு கொண்ட நலம் பற்றி, “எனை யாண்ட தேவே” என்றும் உரைக்கின்றார். இந்தார் அருளமுதமாவது யோகக் காட்சியில் துவாத சாந்தத்தில் பெறலாகும் ஞான வமுதமாம். அதனை இவ்வுலகில் இப்பிறப்பிலேயே பெற வேண்டுமென்று வடலூர் வள்ளல் விழைகின்றாராதலால், “இங்கே இந்தார் அருளமுதம் யான் அருந்தல் வேண்டும்” எனவும், அதற்கு உனது திருவருள் ஆற்றலைத் தந்துதவ வேண்டும் என்றற்கு, “கதவைத் திற” எனவும் கூறுகின்றார். இப்பாட்டில் கதவு என்பது திருவருள் ஞானத் துணை என அறிக.
இதனால், துவாத சாந்தப் பெருவெளியில் விளங்குகின்ற அமுத சந்திரனது ஞான வமுதத்தை அருந்த விழையும் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியவாறாம். (2)
|