3834.

     சாகா அருளமுதம் தான்அருந்தி நான்களிக்க
     நாகா திபர்சூழ் நடராசா - ஏகா
     பவனே பரனே பராபரனே எங்கள்
     சிவனே கதவைத் திற.

உரை:

     தேவ லோகத்து இந்திரர்கள் சூழ்ந்து நின்று வணங்குகின்ற கூத்தப் பெருமானே! ஏகனே! ஞான ஒளி யுடையவனே! மேலானவனே! மேலும் கீழுமானவனே! எங்களுடைய சிவனே! சாகாமைக்கு ஏதுவாகிய உன்னுடைய திருவருள் ஞான வமுதத்தை உண்டு நான் மகிழ்ந்திருக்கும் வண்ணம் நினது திருவருள் ஞானமாகிய கதவைத் திறந்தருளுக. எ.று.

     நாகாதிபர் - நாகர் உலகத்து வேந்தர்களாகிய இந்திரர்கள், ஞான சபையில் கூத்தப் பெருமான் திருநடம் புரியுங்கால் தேவ தேவர்களோடு இந்திரர்களும் சூழ்ந்து நின்று அருட்கூத்தைக் கண்டு இன்புறுபவாதலால், “நாகாதிபர் சூழ் நடராசா” என்று நவில்கின்றார். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒருவனாகிய முதல்வனாதல் பற்றிச் சிவனை, “ஏகா” எனக் குறிக்கின்றார். ஏகன் - ஒருவன். பவன் - ஒளி செய்பவன். சிவனை ஞான ஒளி பரப்பும் சிவசூரியன் என்று வழங்குதல் பற்றி, “பவனே” என்றும், எல்லா வுயிர்கட்கும் தேவதேவர்கட்கும் மேலானவன் ஆதலால் சிவனை, “பரனே” என்றும், எல்லாப் பொருட்கும் கீழாய் நின்று தாங்கி அருளுவது பற்றி, “பராபரனே” என்றும் போற்றுகின்றார். சிவன் எல்லா இன்பங்களையும் மங்கலங்களையும் நல்குபவன் என்பது கொண்டு, “எங்கள் சிவனே” என்று இயம்புகின்றார். திருவருள் ஞான வமுதம் உண்டவர்கள் ஏனை மக்கள் தேவர்களைப் போலச் செத்துப் பிறக்கும் நிலைமையை எய்த மாட்டா ரென்று சிவஞானிகள் செப்புவதால், “சாகா அருளமுதம்தான் அருந்தி நான் களிக்கச் சிவனே கதவைத் திற” என்று வேண்டுகின்றார்.

     இதனால், திருவருள் ஞான வமுதம் பிறவாப் பெருவாழ்வு தரும் பெருமை யுடையது என்பது தெரிவித்தவாறாம்.

     (3)