3835.

     அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி
     மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந்
     தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
     சிவனே கதவைத் திற.

உரை:

     மெய்ப் பொருளாகிய தவத்தை மேற்கொண் டொழுகும் ஞானிகள் போற்றுகின்ற திருவருட் செல்வமே! எங்களை ஆளாகவுடைய சிவபெருமானே! திருவருள் ஞானத்தைப் பெருகுவிக்கும் குளிர்ந்த வமுதத்தை உன் போல் ஆர்வத்தோடு உண்டு உலகியல் மயக்கத்திலிருந்து நீங்கி ஞான போகத்தில் நான் மகிழ்ந்து வாழ்தல் வேண்டி எனக்கு உனது திருவடி ஞானமாகிய கதவைத் திறந்தருளுக. எ.று.

     செய்தற்குரிய உறுதிப் பொருட்களில் சிவஞானம் நோக்கிச் செய்யும் தவமே சிறந்ததாகலின், “பொருளாம் தவம்” என்றும், அதனையுணர்ந்து செய்யும் தவச் செல்வர்களை, “தவ நேயர்” என்றும் புகழ்கின்றார். திருவருட் செல்வமே உருவாக அமைந்தவனாதலால் சிவனை, “தயாநிதி” என்று சிறப்பிக்கின்றார். சிவன்பால் பெறலாகும் திருவருள் ஞானமாகிய அமுதத்தைப் பெற்றவர், உலகியல் வாழ்வு நல்கும் மயக்கத்தில் ஆழ்ந்து கெடாது சிவஞான இன்ப நிலையில் இருந்து மகிழ்வராதலால் அந்த மகிழ்ச்சி வாழ்வைப் பெறுதற் கெழுந்த தமது ஆர்வத்தைத் தெரிவிப்பாராய் வடலூர் வள்ளல், “அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி மருள் நீங்கி நான் களித்து வாழ எங்கள் சிவனே கதவைத் திற” என்று முறையிடுகின்றார்.

     இதனால், சிவஞான வமுதம் திருவருள் ஞானம் மேன்மேலும் பெருக்கும் இயல்பினது என்று உணர்த்தியவாறாம்.

     (4)