3836.

     வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
     ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
     திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
     சிறப்பா கதவைத் திற.

உரை:

     குறையாத பல வகைகளை யுடைய பாட்டுக்களை ஆக்கவல்ல, பாவலர்கள் பாடித் துதிக்கின்ற திருச்சிற்றம்பலத்தே உடைய சிவபெருமானே! எல்லாச் சிறப்புக்களையுடைய பெருமானே! தேவர்களுக்கும் பெறுதற் கரியதாம் என்று பெரிய வேதங்கள் புகழ்ந்து ஓதுகின்ற ஞான உதயமாகிய அமுதத்தை, நான் அருந்தி ஞானம் பெறுமாறு உனது திருவருளாகிய கதவைத் திறந்தருளுக. எ.று.

     ஆனாமை - குறையாமை. ஆசிரியப்பா முதலிய நால்வகைப் பாக்களையும் அவற்றின் பல்வகை இனங்களையும் பாட வல்ல பாவலரை, “திறப் பாவலர்” என்று சிறப்பிக்கின்றார். பாட்டும் பாட்டின் திறமும் வல்லவர் என்பதற்கு, “திறப்பாவலர்” என்று கூறுகின்றார் எனினும் அமையும். குமரகுருபரர், சிவப்பிரகாசர் முதலிய பெருமக்கள் பாவகை எல்லாம் பாட வல்லவராதலின் அவர்களை இங்கே நினைப்பிக்கின்றார் என்பதுமுண்டு. சிற்றம்பலம் - தில்லையம்பலம். சிற்றம்பலம் என்பது நாளடைவில் சிதம்பரம் என மருவி வழங்குகிறது. சிறப்புடையவன் என்னும் பொருளதாகிய சிறப்பன் என்னும் பெயர் சிறப்பா என விளி யேற்றது. அமுதுண்டு கற்பக லோக போக நுகர்ச்சியில் மூழ்கிக் கிடப்பவராதலால் தேவர்கட்குத் திருவருள் ஞானம் எய்துவதரிது என்று வேதங்கள் உரைக்கின்றன. ஆதலால் அதனை “வானோர்க்கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற ஞானோதய அமுதம்” என்று புகழ்கின்றார். திருவருளமுதம் ஞானம் பெறுதற்கு ஏதுவாவது தோன்ற, “ஞானோதய அமுதம்” என்று சொல்லுகின்றார்.

     இதனால், திருவருள் அமுதம் ஞானப் பேற்றுக்கு ஏற்ற தென்பது தெரிவித்தவாறாம்.

     (5)