3837.

     எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்
     நல்லார் அமுதமது நான்அருந்த - நல்லார்க்கு
     நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு
     செல்வா கதவைத் திற.

உரை:

     நல்லவர்களுக்கு நல்வாழ்வைத் தருகின்ற நடராசப் பெருமானே! அம்பலத்தில் உயர்ந் தோங்குகின்ற அருட் செல்வரே! எவ்வகைச் செயல்களையும் செய்ய வல்ல சித்தன் என்று எல்லா வேதங்களும் சொல்லிப் பாராட்டுகின்ற நன்ஞானமுடையவர்கள் விரும்பி உண்கின்ற ஞான வமுதத்தை நானும் அருந்தி மகிழுமாறு உனது திருவருளாகிய கதவைத் திறந்தருளுக. எ.று.

     நல்லார் - நன்ஞான நல்லொழுக்க முடையவர்கள். அப்பெரு மக்களுக்குக் குறையாத இன்ப வாழ்வை நல்குவது பற்றிச் சிவபெருமானை, “நல்லார்க்கு நல்வாழ்வு அளிக்கும் நடராயா” என்றும், அவர் அம்பலத்தில் திருக்கூத்து ஏற்றி அருள் வழங்குவது பற்றி, “மன்றோங்கு செல்வா” என்றும் போற்றுகின்றார். எண்வகைச் சித்திகளையும் செய்ய வல்லவன் சிவபெருமானாகிய சித்தன் என்று நால்வகை வேதங்களும் ஓதுகின்றன என்பதற்கு, “எல்லாமும் வல்ல சித்தென்று எல்லா மறைகளும் சொல் நல்லார்” என்று எடுத்துரைக்கின்றார். நலமேயுருவாகக் கொண்டவனாதலால் “நல்லார்” என்றும், அப்பெருமான் அருளுகின்ற ஞான வமுதத்தை “நல்லாரமுதம்” என்றும் சிறப்பிக்கின்றார். அப்பெருமானுடைய திருவருளாகிய அமுதத்தைத் தாமும் பெறுதற்கு விழைந்து நிற்கின்றமை தோன்ற, “நல்லார் அமுதமது நான் அருந்த” என்றும், அது இறைவன் திருவருளாலன்றி எய்தா தென்பது விளங்க, “மன்றோங்கு செல்வா கதவைத் திற” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், திருவருள் ஞானமாகிய அமுதத்தை நல்கி, நல்வாழ்வளிக்கும் நல்லவனே என்று பாராட்டியவறாம்.

     (6)