3838.

     ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
     வாழ்நிலைக்க நான்உண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
     ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
     தேவா கதவைத் திற.

உரை:

     என்பால் ஞானப் பேற்றுக்குரிய தன்மை நிலைபெறும் பொருட்டு இவண் வருக வென்று என்னை அன்போடு மனமுவந்து ஆண்டு கொண்ட திருச்சிற்றம்பலத்தையுடைய மாதேவனே; ஏழ் நிலைக்கும் மேல் நிலையிலுள்ள குளிர்ந்த ஞான வமுதத்தை என் வாழ்வு நிலைபெறுமாறு நான் உண்டு மேன்மை யுறுதல் பொருட்டு எனக்கு உனது திருவருளாகிய கதவைத் திறந்தருளுக. எ.று.

     அறுவகை ஆதாரங்களும் மேலதாகிய அந்த நிலையிலிருக்கும் குளிர்ந்த ஞானாமிர்தத்தை, “ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்” என்று குறிக்கின்றார். ஏழாம் நிலை துவாத சாந்தம். அவ்விடத்தே தோன்றி ஒளிர்கின்ற சந்திரனது அமுதம் “ஏழ்நிலைக்கும் மேற்பாலுள்ள தண்ணமுதம்” என விளக்கப்படுகிறது. வாழ் நிலைக்க என்றவிடத்து, வாழ் என்பது முதனிலைத் தொழிற் பெயர். வாழ்வு என்று பொருள். அது பெறுதற் கரிய ஞான வாழ்வாதலால் அது நீங்காமைப் பொருட்டு, “வாழ் நிலைக்க நானுண்டு மாண்புற” என வுரைக்கின் றார். கேழ் - தன்மை; ஞானப் பேற்றிற்குரிய தகுதியுமாம். அத்தகுதி என்றும் நிலைபெறுதல் வேண்டி இறைவன் இளமையிலேயே தம்மை ஆண்டு கொண்டமை புலப்பட, “கேழ் நிலைக்க என்னை உவந்தாண்ட அம்பல மாதேவா” என்று போற்றுகின்றார். ஆவா என்பது அருகே வா என வுரைக்கும் விளிச் சொல் வகை.

     இதனால், திருவருள் ஞானமாகிய அமுதம் ஞான வாழ்வில் நிலை பெறுவிக்கும் என்பது தெரிவித்தவாறாம்.

     (7)