3839.

     ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே
     ஞான அமுதமது நான்அருந்த - ஞான
     உருவே உணர்வே ஒளியே வெளியே
     திருவே கதவைத் திற.

உரை:

     ஞானமே உருவாகிய பெருமானே! உயிருணர்வுக்கு உணர்வாய் இருப்பவனே! ஒளிமயமானவனே! பரவெளியாய் விளங்குபவனே! சிவஞானப் பொருளாகிய திருவே! கீழ்மையைத் தருகின்ற இவ்வுலக வாழ்வு தரும் துன்பத்திலிருந்து நீங்கிச் சிவானந்தமாகிய பேரின்பத்தை, நான் அடைதற் பொருட்டுத் திருவருள் ஞானமாகிய அமுதத்தை அருந்தி, உய்தற்கு நின் திருவருளாகிய கதவைத் திறப்பாயாக. எ.று.

     பரஞானமாகிய சிவஞானமே தனக்கு உருவாக வுடையவன் என்று ஞானிகள் உரைப்பதால் சிவனை, “ஞான உருவே” என்றும், உயிர்க்குயிராய் அதன் உணர்வுக்குணர்வு வடிவாய் விளங்குவது பற்றி, “உணர்வே” என்றும் உரைக்கின்றார். உலகப் பொருட்களின் ஒளிக்கு ஒளி தரும் பேரொளிப் பொருளாய்ப் பிறங்குவது பற்றி, “ஒளியே” எனவும், எல்லா உலகுகளையும் தனக்குள் அடக்கி யிருக்கும் அண்டவெளிக்கு அப்பாலதாகிய பெருவெளியையே தனக்கு உருவமாகக் கொண்டு ஒளிர்வது பற்றி, “வெளியே” எனவும், சிவஞானத்தால் பெறுகின்ற சிவபோகத்தின் திருவுருவாய்த் திகழ்வது பற்றி, “திருவே” எனவும் பராவுகின்றார். நிலையாப் பொருள்களின் மேல் ஆசையை விளைவித்து அவற்றை ஈட்டியும் இழந்தும் துன்புறச் செய்தலின் உலகியலை, “ஈன உலகத்து இடர்” என்றும், இதனுள் கிடந்து துன்புறும் நிலைமையிலிருந்து நீங்கினாலன்றி நிலைத்த இன்பப் பேறு எய்தாதென்பது பற்றி, “இடர் நீங்கி இன்புறவே” என்றும், அவ்வின்பப் பேறும் சிவஞானமாகிய அமுதினை உண்டாலன்றிக் கைவரப் பெறாதென்பது பற்றி, “ஞான அமுதமது நான் அருந்த” என்றும், அதற்குத் திருவருளின் இன்றியமையாமை தோன்ற, “கதவைத் திற” என்றும், இசைக்கின்றார்.

     இதனால், உலகியல் துன்பத்தினின்றும் நீங்கி, இன்புறுதற்கு ஞானத் திருவமுது இன்றியமையா தென்பது இயம்பியவாறாம்.

     (8)