3840. திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
தேனே கதவைத் திற.
உரை: துவாத சாந்தத்துக்கு அப்பாலானதாகிய திரையோதசமாகிய ஞான வானத்தில் ஒளிர்கின்ற சிவசூரியனே! யோக நூல்களில் வரைந்தோதப்படும் சந்திரனிடத்து ஒழுகும் குளிர்ந்த அமுதம் எய்தும் நெறி விளங்க எம்போல்வார்க்கு ஓதி யருளுகின்ற குருமுதல்வனே! எங்கள் தலைவனே! பெருமானே! மணிகள் இழைத்த அம்பலத்தின்கண் எழுந்தருளி இன்பம் தரும் தேன் போன்றவனே! உனது திருவருளாகிய கதவைத் திறந்தருளுவாயாக. எ.று.
துவாத சாந்தமாகிய சந்திர மண்டலத்திற்கு மேலே யுள்ள பதிமூன்றாவதாகிய அங்குலித்தானம் திரையோதசம் எனப்படுகின்றது. இதனைச் சிதாகாசம் என்றும், அங்கே ஒளிர்கின்ற சிவசூரியனை, “திரையோதசத்தே திகழ்கின்ற என்றே” எனக் கூறுகின்றார். என்று - சூரியன். என்றூழ் எனவும் வழங்கும். வரையோது தண்ணமுதம் - யோக சந்திர மண்டலம் என யோகக் காட்சியின் முடிவாக யோக நூல்கள் வரையறுத்துக் காட்டுவது. யோக குருவாய் எழுந்தருளி யோக முடிவை விளக்குவது பற்றி, “தண்ணமுதம் வாய்ப்ப உரை ஓதுவானே” என்று உரைக்கின்றார். எம்மான் - எங்கள் தலைவன். மான் - தலைவன். பெருமான் என்பது பெம்மான் என மருவிற்று. மணி மன்றில் கூத்தப் பெருமானாய் எழுந்தருளிக் காண்பார்க்கு இன்பம் தருதலின், “மணி மன்றில் தேனே” என்றும் பாராட்டுகின்றார். அமுதமது என்பதில் அது பகுதிப் பொருள் விகுதி.
இதனால், யோக நூல்கள் வரையறுத்துக் கூறும் யோக அமுத சந்திரனது அமுதத்தை யுண்ணும் வேட்கை புலப்படுத்தவாறாம். (9)
|