3845. யாரினும் கடையேன் யாரினும் சிறியேன்
என்பிழை பொறுப்பவர் யாரே
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே
பாவியேன் பிழைபொறுத் திலையேல்
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி
உடம்பைவைத் துலாவவும் படுமோ
சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம்
தெய்வத்துக் கடாதவன் என்றே.
உரை: எல்லாரினும் கடைப்பட்டவனாகிய யான் எல்லாரினும் மிக்க சிறுமை யுடையேனாதலால் யான் செய்கின்ற பிழைகளை யாவர்தான் பொறுப்பார்கள்; நிலத்தினும் பொறுமைத் தன்மையில் பெரியவனாகிய நீயே என் பிழையைப் பொறுத்தருளாயாயின் பாவியாகிய யான் மக்கள் வாழும் ஊர்க்குள் புக முடியுமோ; இவ்வுடம்பைச் சுமந்து கொண்டு உலாவ முடியுமோ? எவ்வூர்க்குள்ளேனும் புகுவேனாயின் அவ்வூரவரும் எல்லாருக்கும் பொதுவாகிய தெய்வத்தால் வெறுக்கப்பட்டவ னென்று தம்மிடையே என்னைச் சேர்த்துக் கொள்ள மாட்டாரன்றோ. எ.று.
எல்லாரிலும் கடையவனாகிய தன்மையும் சிறுமை இயல்பும் உடையவனாதலால் யான் செய்யும் பிழைகளை ஒருவரும் பொறுக்க மாட்டார் எனத் துணிகின்றாராதலால், “யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே” என்று முன்மொழிகின்றார். பொறுமைக்கு எல்லையாக நிலத்தையே சான்றோர் உவமம் கூறுவது மரபு. அந்நிலத்தினும் பொறுமையால் மிக்க பெருமை யுடையவன் இறைவன் என்பது குறித்து, “பாரினும் பெரிதாம் பொறுமையோய்” என்றும், என்னுடைய பாவ மிகுதி நோக்கி நீ பொறாது வெறுப்பாயானால் உலகவர் என்னைத் தம்போல் ஒருவனாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பாராய், “நீயே பாவியேன் பிழை பொறுத்திலையேல் ஊரினும் புகுத ஒண்ணுமோ” என்று உரைக்கின்றார். பாவங்களைச் செய்தற்குக் கருவியும் துணையுமாகிய இவ்வுடம்பைச் சுமந்து கொண்டு நான் எங்கும் யாவரும் காணவும் திரிய முடியாது என்றற்கு, “பாவி உடம்பை வைத்து உலாவவும் படுமோ” என்றும், இவ்வுடம்பைச் சுமந்து கொண்டு ஊர்க்குள் நுழைந்தாலும் தெய்வத்தால் வெறுக்கப்பட்டவன் என்று என் உடம்பை நோக்கி என்னைத் தம்மிடையே ஒருவரும் சேர்த்துக் கொள்ள மாட்டார் என வருந்துவாராய், “சேரினும் தெய்வத்துக்கு அடாதவன்” என்றும், “எனைத் தான் சேர்த்திடார்” என்றும், எல்லார்க்கும் பொதுவாகிய கூத்தப் பெருமானாகிய தெய்வமே என்னைக் கைவிட்டு விட்டது என்று பிறரெல்லாம் கருதுவர் என்பாராய், “பொதுவாம் தெய்வத்துக்கு அடாதவன் என்று சேர்த்திடார்” என்றும் இயம்புகின்றார்.
இதனால், தெய்வமாகிய நீ என் பிழையைப் பொறுத் தருளாவிடில் என்னை உலகில் மக்களினத்தார் தம்மோடு சேர்க்காமல் வெறுத்தொதுக்கி விடுவர் எனத் தெரிவித்துக் கொண்டவாறாம். (4)
|