3846.

     அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும்
          அப்பநீ அடியனேன் தன்னை
     விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன்
          விடுதியோ விட்டிடு வாயேல்
     உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ
          உன்னருள் அடையநான் இங்கே
     படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப்
          பாடெலாம் நீஅறி யாயோ.

உரை:

     அப்பனே! பொருந்தாத செயல்கள் பல செய்துள்ளேன் என்றாலும் உனக்கு அடியவானாகிய என்னை விலக்க மாட்டாய் என்று அறிந்து மகிழ்வோடு இருக்கின்றேன்; என்னைக் கைவிடுவாயோ? அவ்வாறு கைவிடுவாயானால் இடையில் உடையின்றி நிர்வாணமாய்த் திரியும் பித்தரைப் போல வருந்துவேன்; ஐயோ உனது திருவருள் நெறியை அடைதற்கு நான் உலகில் படாத பாடுகள் பலவும் பட்டேன்; அந்தப் பாடுகளை யெல்லாம் நீ அறிந்திலையோ. எ.று.

     நேர்மைக் கொவ்வாத காரியங்களை அடாத காரியங்கள் என்பர். பிறப்பு ஒழுக்கத்திற்கும் மக்கள் தன்மைக்கும் ஒவ்வாத காரியங்கள் என்று உரைப்பினும் அமையும். வயிறு வளர்த்தல் வேண்டி இக்காரியங்களைச் செய்தேனாதலால் நீ அவற்றைப் பொருளாகக் கருதாமல் பொறுத்துக் கொண்டு என்னைப் புறக்கணித்து ஒதுக்க மாட்டாய் என எண்ணி மகிழ்ந்திருக்கிறேன் என்பாராய், “அடாத காரியங்கள் செய்தனன் எனினும் அப்ப நீ அடியேன் தன்னை விடாதவாறு அறிந்தே களித்திருக்கின்றேன்” என்று கூறுகின்றார். திருத்தொண்டர்களின் வரலாற்றால் அடாதவற்றைச் செய்த அடியார்களையும் நீ வெறுத்தொதுக்காமல் ஆண்டருளியுள்ளாய் என்றறிந்து நம்மையும் ஆண்டருள்வான் இறைவன் என்று மகிழ்ந்திருக்கின்றேன் என்பாராய், “விடாதவாறு அறிந்தே களித்திருக்கிறேன்” என்று மொழிகின்றார் எனினும் பொருந்தும். உடாத - வெற்றர் இடையில் உடையின்றி நிர்வாணமாய்த் திரியும் பித்தர்களை “உடாத வெற்றர்” என்று உரைக்கின்றார். திகம்பரராகிய சமணரை உடாத வெற்றர் என்று பெரியோர் கூறுவது வழக்கம். திருவருள் நெறியை அடைதல் வேண்டி வடலூர் வள்ளல் இளமை முதலே பட்ட துன்பங்கள் பலவாதலால், “உன்னருள் அடைய நான் இங்கே படாத பாடெல்லாம் பட்டனன்” என்று பகர்கின்றார். படாத பாடு - என் போன்றவர் அடைந்திராத துன்பங்கள். எல்லாமறியும் இயல்பினனாதலின் இறைவன் தமது துன்பத்தையும் அறிந்திருப்பான் என்ற கருத்தால் “அந்தப் பாடெல்லாம் நீ அறியாயோ” என்று கூறுகின்றார். வடலூர் வள்ளலின் பிறப்பும் வாழ்வும் உள்ளவாறு விளங்க எடுத்துரைக்கும் வரலாறுகள் இல்லாமையால் அவர் சொல்லுகின்ற படாத பாடெல்லாம் இன்னவை என நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.

     இதனால், இறைவன் திருவருள் நெறியை அடைதற்கு, வடலூர் வள்ளல் படாத பல பாடுகள் பட்டமை தெரிவித்தவாறாம்.

     (5)