3847. அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே
அழைத்தனன் அப்பனே என்னை
எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்
எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
பெருந்திறல் சித்திகள் எல்லாம்
சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன்
சென்னிதொட் டுரைத்தனை களித்தே.
உரை: என்னுடைய அப்பனாகிய பெருமானே! நான் பட்ட துன்பங்களெல்லாம் நீ அறியாயோ என்று உன்பால் யான் முறையிட்டேனாக, நீயும் என்னைப் புறக்கணிக்காமல் இத்தருணத்தில் எழுந்தருளி வந்து என்னை எடுத்து மார்போ டணைத்து, மகனே, இனி நீ அஞ்ச வேண்டா; உன்னை விட்டு இவ்வுலகில் சிறிது போதும் பிரிய மாட்டோம்; பெரிய திறமை வாய்ந்த சித்திகள் யாவும் உன்னிடத்தே சிறப்புற நிகழுமாறு அருளி யுள்ளோம் என்று என் தலைமேல் கை வைத்து உவகையுடன் உரைத் தருளினாய்; இனி எனக்கு ஒருகுறையு மில்லையாம். எ.று.
ஒரு குறையு மில்லையாம் என்பது குறிப்பெச்சம். திருவருள் நெறியை அடைந்த தமக்குத் திருவருள் நன்மையும் வன்மையும் எய்தாமையுணர்ந்து, நான் பட்ட பாட்டை ஐயனே நீ இன்னும் அறியாயோ என்று நான் வருந்தி அழைத்ததற்கு நீயும் மனமிரங்கி என் முன் வந்தருளினாய் என விளக்குவாராய், “அறிந்திலையோ என் பாடெல்லாம் என்றே அழைத்தனன் அப்பனே எனை எறிந்திடாது இந்தத் தருணம் வந்தாய்” என உரைக்கின்றார். தன்முன் போந்தருளிய பெருமான் தமக்கு அருள் செய்த திறத்தை உரைக்கலுற்று, தன்னை இருகைகளாலும் அன்போடு எடுத்துத் தன் மார்பிடை அணைத்து உரைத்தருளிய திறத்தை, “எடுத்தணைத்து அஞ்சிடேல் மகனே பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்” என மொழிந்ததையும், பிறகு தம்மேல் கைவைத்து மகிழ்ச்சியோடு எல்லாச் சித்திகளையும் செய்ய வல்ல ஆற்றலை அளித்தருளிய நலத்தை, “பெருந்திறல் சித்திகள் எல்லாம் சிறந்திட உனக்கே தந்தனம்” எனவும், “என் சென்னி தொட்டுக்களித்து உரைத்தனை” எனவும் இசைக்கின்றார். சென்னி - தலை.
இதனால், வடலூர் வள்ளலுக்குச் சித்திகள் பலவற்றைச் செய்தற்கு இறைவன் அருளிய திறம் எடுத்தோதியவாறாம். (6)
|