3848. களித்தென துடம்பில் புகுந்தனை எனது
கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்
சிறப்பினால் கலந்தனை உள்ளம்
தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்
தடைபடாச் சித்திகள் எல்லாம்
அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை
அடியன்மேல் வைத்தவா றென்னே.
உரை: பெருமானே! மனம் களிகூர்ந்து என்பால் வந்த நீ என் உடம்பினுட் புகுந்து என் கருத்திலே அமர்ந்து அன்பு நிறைந்து என்னையும் தெளிவித்து, என் அறிவில் விளங்கி, என் உயிர்க்குயிராய் சிறப்புறக் கலந்து என்னுள்ளம் அருளால் தவிர்க்கும் வண்ணம் சாகா வரங் கொடுத்து எப்போதும் தடைபடுதல் இல்லாத சித்திகள் எல்லாவற்றையும் எனக்குத் தந்தருளினாய்; உன்னுடைய பெரிய கருணையை அடியவனாகிய என்பால் செய்தருளினாய்; உனது அருள் நலத்தை என்னென்பது. எ.று.
வள்ளற் பெருமானுடைய உடம்பினுட் புகுந்து மனத்தில் அமர்ந்து அறிவைத் தெளிவித்து அதன்கண் விளங்கித் தோன்றிய திருவருள் நலத்தை, “எனது உடம்பில் புகுந்தனை” என்றும், “எனது கருத்தில் அமர்ந்தனை” என்றும், “அறிவில் விளங்கினை” என்றும் எடுத்தோதுகின்றார். கருத்தில் அமர்ந்த இறைவன் அறிவைத் தெளிவித்தமை புலப்பட, “தெளித்த அறிவில் விளங்கினை” எனத் தெரிவிக்கின்றார். உயிர்க் குயிராய்க் கலந்து இயலுதல் இறைவனுக்குப் பொதுவியல்பாயினும் தமது உயிரில் சிறப்புறக் கலந்து கொண்டதை வெளிப்படுத்தற்கு, “உயிரில் சிறப்பினால் கலந்தனை” என்றும், அதனால் தமது உள்ளம் அருள் நிறைந்து தளிர்க்கும் வண்ணம் சாகா வரங் கொடுத்தான் என்றும், அந்த நலமிகுதியால் தமக்குச் சித்திகள் பலவும் தடையின்றிச் செய்ய வல்ல தன்மை உண்டாயிற்று என்றும் கூறுவாராய், “தடைபடாச் சித்திகள் எல்லாம் அளித்தனை எனக்கே” என்றும் வியந்து உரைக்கின்றார். இத்தகைய பெருங் கருணையைத் தமக்குச் செய்தமை பற்றித் தமது ஆராப் பேரின்பத்தை, “நின் பெருங் கருணை அடியன் மேல் வைத்தவாறு என்னே” என்று வியந்து பாராட்டுகின்றார்.
இதனால், இறைவன் தமக்கு அறிவு தந்து சாகா வரம் கொடுத்துச் சித்திகள் செய்ய வல்ல சிறப்பளித்தமை தெரிவித்தவாறாம். (7)
|