3850.

     சாற்றுவேன் எனது தந்தையே தாயே
          சற்குரு நாதனே என்றே
     போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும்
          பூரணா எனஉல கெல்லாம்
     தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த
          தூயபேர் உதவிக்கு நான்என்
     ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம்
          அப்பநின் சுதந்தரம் அன்றோ.

உரை:

     அப்பனாகிய சிவபெருமானே! உன்னை எனக்குத் தந்தையே தாயே சற்குரு நாதனே என்று சொல்லித் துதிப்பேன்; திருச்சிற்றம்பலத்தில் ஆடி யருளுகின்ற பூரணனே என்று உன்னை நாளும் போற்றுவேன்; நீ அருளாவிடில் உலகத்தார் எல்லாம் அறியும்படி உன்னைப் பழித்துத் தூற்றுவேன்; அன்றியும் நீ அருள் வழங்குகிற போது நீ எனக்குச் செய்கிற தூய பேருதவியை நினைந்து நான் என்ன கைம்மாறு செய்வேன்; என்னுடைய உடல் உயிர் பொருளாகிய எல்லாம் உனக்கே உரியவையாய் உன் வழியில் நிற்பனவாம் அன்றோ. எ.று.

     சற்குரு நாதன் - சன்மார்க்கத்தை அறிவுறுத்துகின்ற ஞானாசிரியன். பூரணன் - எல்லா நலன்களும் நிறைந்தவன். அருளுவாரைப் போற்றுவதும் அருள் செய்யாதாரைத் தூற்றுவதும் உலகவர் இயல்பாதலின், யான் உனது அருள் பெறாத போது உலகமெல்லாம் அறிய தூற்றுவது என் செயலாம் என்பாராய், “உலகெல்லாம் தூற்றுவேன்” என்று உரைக்கின்றார். உதவி பெற்றவிடத்து இன்பத்தால் பாராட்டுவது இயல்பாதல் பற்றி, நான் நீ செய்த உதவிக்கு யாது கைம்மாறு செய்வேன் என்பாராய், “எனக்கு நீ செய்த தூய பேருதவிக்கு நான் என் ஆற்றுவேன்” என்று கூறுகின்றார். என் உடல் உயிர் பொருள் மூன்றையும் கைம்மாறாகத் தரலா மென்றாலோ அவை உன் உரிய பொருளாதலின் செய்வ தறியாது மயங்குகின்றேன் என்ற குறிப்புத் தோன்ற, “ஆவி உடல் பொருள் எல்லாம் அப்ப நின் சுதந்தர மன்றோ” என்று விளம்புகின்றார்.

     இதனால், இறைவன் செய்த திருவருளுக்குக் கைம்மாறு நல்க மாட்டாமை நினைந்து கையறவு பட்டவாறாம்.

     (9)