3851. சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
தூயநல் உடம்பினில் புகுந்தேம்
இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
இன்புறக் கலந்தனம் அழியாப்
பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
பரிசுபெற் றிடுகபொற் சபையும்
சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
தெய்வமே வாழ்கநின் சீரே.
உரை: சிவ பரம்பொருளாகிய தெய்வமே! எல்லா உரிமையும் உனக்குத் தந்துள்ளோம்; உன்னுடைய தூய நல்ல உடம்பினுட் புகுந்துள்ளோம்; நலமே நினையும் உன்னுடைய மனத்தின்கண் எழுந்தருளி யுள்ளோம்; இன்பம் உண்டாகுமாறு உன் உயிரோடு உயிராய்க் கலந்துள்ளோம்; ஆதலால் நீ அழிவில்லாத சிவபதம் பெற்று வாழ்க; திருவருளாகிய பேரொளி ஞானத்தைப் பரிசாகப் பெற்றுக் கொள்க; இனிப் பொன்னம்பலத்தையும் ஞானம் தரும் சிற்சபையையும் போற்றுவாயாக என்று எனக்குத் திருவாய் மொழிந் தருளினாய்; ஆதலால் நினது பெரும் புகழ் வாழ்க. எ.று.
நினைந்ததை நினைந்தாங்கு செய்ய வல்ல சித்திகளை நல்கினமை பற்றி, “சுதந்தரம் உனக்கே கொடுத்தனம்” என்றும், பொன்னிறம் பெறுமாறு உடம்பில் புகுந்து கொண்டாராதலின், “உனது தூய நல்லுடம்பினில் புகுந்தேம்” என்றும், எவ்வுயிர்க்கும் நலமே நினைக்கும் உன் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கின்றோம் என்பது தோன்ற, “இதம் தரும் உளத்தில் இருந்தனம்” என்றும், எம்முடைய கலப்பால் உனக்கு இனி இன்பமே பெருகும் என்பது தோன்ற “உனையே இன்புறக் கலந்தனம்” என்றும், இறைவன் கூற்றாகக் கொண்டெடுத்து மொழிகின்றார். பதம் - சிவபதம். அருட் பெருஞ் சோதி - திருவருள் ஞானமாகிய பெரிய ஞானவொளி. சிதந்தரு சபை - காண்பார்க்கு ஞானம் நல்கும் ஞான சபை.
இதனால், சிவ பரம்பொருளின் அருளுரை பெற்ற இன்பத்தால் நன்றி கூறியவாறாம். (10)
|