37. அழிவுறா அருள் வடிவப் பேறு
அஃதாவது, திருவருட் பேற்றால் அழிந்து படுகின்ற உடம்பின் தன்மையை மாற்றித் திருவருள் ஞான வடிவம் தமக்கு எய்துமாறு சிவபெருமான் அருள் புரிந்ததை வியந்து பாடுவதாம்.
உலகியலில் மக்கள் பிறந்து வளர்ந்து பின்னர், முதிர்ந்து மெலிந்து இறந்து விடுவதைக் கண்ட வடலூர் வள்ளல், ஞானப் பேறு மக்களை இவ்வாறு மூப்பும் சாக்காடும் எய்தி வருந்தச் செய்கிறது. ஆனால் இறைவன் அருளும் ஞானப் பேறு உலகியல் ஞானப் பேற்றினும் சிறப்பும் மேன்மையும் உடைத்தாதலால் அதனைப் பெறுபவர் அழியா உடம்பு பெற்றுத் திருவருள் ஒளி உடம்பு கொண்டு இன்புறுவர் எனத் தெளிந்து தமக்கு அந்த அழியாத் திருவருள் ஞான வுடம்பு நல்கியதாக மகிழ்ந்து பாடுகின்றார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3852. சிவங்க னிந்தசிற் றம்பலத்
தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே
நவங்க னிந்தமேல் நிலைநடு
விளங்கிய நண்பனே அடியேன்றன்
தவங்க னிந்ததோர் விண்ணப்பம்
திருச்செவி தரித்தருள் புரிந்தாயே
பவங்க னிந்தஇவ் வடிவமே
அழிவுறாப் பதிவடி வாமாறே.
உரை: சிவபோகம் நிறைந்த திருச்சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளி, உயிர்கட்கு அருள் பெருகும் திருக்கூத்தினைச் செய்கின்ற பெருவாழ்வையுடைய சிவபெருமானே! புதுமை மிகுந்த மேலும் கீழும் நடுவுமாகிய எங்கும் விளக்கமுற நிலவுகின்ற இனிய நண்பனே! அடியவனாகிய என்னுடைய தவம் நிறைந்த விண்ணப்பத்தை அழகிய செவிகளில் ஏற்று உலகில் பிறக்கும் தன்மை நிறைந்த இவ்வுடம்பே அழிவில்லாத சிவ வடிவமாகுமாறு அருள் புரிந்தாய்; ஆதலால் உனக்கு யான் என்ன கைம்மாறு செய்வேன். எ.று.
திருச்சிற்றம்பலம் சிவஞான நலம் விளங்கும் அருளிடமாதலால் அதனை, “சிவம் கனிந்த சிற்றம்பலம்” என்றும், அதன்கண் எழுந்தருளி ஞான நடம் புரிந்து ஆன்மாக்கட்கு ஞான போகப் பெருவாழ்வை அருளுகின்றான் என்பது பற்றிக் கூத்தப் பெருமானை, “சிவம் கனிந்த சிற்றம்பலத்து அருள் நடம் செய்கின்ற பெருவாழ்வே” என்றும் போற்றுகின்றார். இவ்வுலகில் மேல், நடு, கீழ் ஆகிய மூன்று நிலைகளிலும் நீக்கமற நின்று, புத்தின்பம் விளங்க அருளுதலால், “நவம் கனிந்த மேல் நிலை நடு விளங்கிய நண்பனே” என்று நவில்கின்றார். சிவ நினைவும் சிவ மொழியும் செயலும் மேற்கொண்டு சிவன்பால் விண்ணப்பம் செய்வதால், “அடியேன்தன் தவம் கனிந்ததோர் விண்ணப்பம்” என்றும் அதனை அருளோடு ஏற்றுக் கொண்டு தமக்குச் சிவஞான வடிவு எய்துதற்குரிய தகுதியினை வெளிப்படுப்பாராய், “அழிவுறாப் பதிவடிவாமாறு அருள் புரிந்தாய்” என்றும் தெரிவித்து மகிழ்கின்றார். உலகில் தாம் கொண்டுறையும் உடம்பு பிறப்பிறப்புக்களையுடைய தன்மை அமைந்ததாகலின், “பவம் கனிந்த இவ்வடிவம்” என்று குறிக்கின்றார். இவ்வுடம்பை விட்டு இறந்து பெறப்படுவதன்றி இவ்வுடம்பே இறவாத் தன்மையுற்று ஞான வடிவம் பெறுவது தேர்ந்து, “இவ்வடிவமே அழிவுறாப் பதி வடிவாமாறு அருள் புரிந்தாய்” என்று விளம்புகின்றார்.
இதனால், அழிவுறா ஞான வடிவம் எய்துமாறு, இறைவன் தனக்கருள் புரிந்தமை தெரிவித்தவாறாம். இனி வரும் பாட்டுக்கள் தோறும் இதுவே கருத்தாக உரைத்துக் கொள்க. (1)
|