3853. விளங்கு கின்றசிற் றம்பலத்
தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
களங்க மில்லதோர் உளநடு
விளங்கிய கருத்தனே அடியேன் நான்
விளம்பி நின்றதோர் விண்ணப்பம்
திருச்செவி வியந்தருள் புரிந்தாயே
உளங்கொள் இவ்வடி விம்மையே
மந்திர ஒளிவடி வாமாறே.
உரை: ஞான நலம் விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் அருட் கூத்தாடுகின்ற பெருவாழ்வு அருளும் சிவபெருமானே! குற்றமில்லாத மனத்தின்கண் விளங்குகின்ற தலைவனே! அடியவனாகிய யான் மனத்தால் விரும்புகின்ற இவ்வுடம்பே இப்பிறவியிலேயே மந்திர ஒளி நிறைந்த உடம்பாகுமாறு வாய் திறந்து ஓதி நிற்கிற எனது விண்ணப்பத்தைச் செவி நிரம்பக் கேட்டு உனது திருவருளை நல்கினாயாதலால் இதற்கு யான் என்ன கைம்மாறு செய்வேன். எ.று.
ஞான நலம் விளங்குவது பற்றித் திருச்சிற்றம்பலத்தை, “விளங்குகின்ற சிற்றம்பலம்” என்றும், அதன்கண் ஆன்மாக்கட்கு உய்தி எய்தும் பொருட்டுத் திருக்கூத்து இயற்றுவது பற்றிச் சிவனை, “அருள் நடம் விளைக்கின்ற பெருவாழ்வே” என்றும் போற்றுகின்றார். குற்றமில்லாத தூய உள்ளத்தினைக் கோயிலாகக் கொண்டு அருளொளி செய்வது பற்றி, “களங்க மில்லதோர் உளநடு விளங்கிய கருத்தனே” என்று துதிக்கின்றார். இப்பிறப்பில் யான் விரும்பிப் பேணுகின்ற இவ்வுடம்பு இப்பிறப்பிலேயே சிவமந்திரத்தின் ஒளி நிறைந்த மந்திர தேகமாகுமாறு எனக்கு வழங்கியருளினாய் என்று கூறுவாராய், “உளங் கொள் இவ்வடிவு இம்மையே மந்திர ஒளி வடிவாமாறு” என்று வியந்து அருள் புரிந்தாய் என்று விளம்புகின்றார். (2)
|