3854. விஞ்சு கின்றசிற் றம்பலத்
தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
எஞ்சல் அற்றமா மறைமுடி
விளங்கிய என்னுயிர்த் துணையேநான்
அஞ்சல் இன்றியே செய்தவிண்
ணப்பம்ஏற் றகங்களித் தளித்தாயே
துஞ்சும் இவ்வுடல் அழிவுறா
தோங்குமெய்ச் சுகவடி வாமாறே.
உரை: திருவருள் நலத்தால் மேன்மை யுறுகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளி அருட் கூத்தியற்றும் வகையால் ஆன்மாக்கட்கு இன்பப் பெருவாழ்வு நல்கும் பெருமானே! குறைவ தில்லாத வேதத்தின் உச்சியில் விளங்குகின்ற என் உயிர்த் துணைவனே! யான் நெஞ்சில் சிறிதும் அச்சமின்றிச் செய்து கொண்ட விண்ணப்பத்தை ஏற்றருளி இறந்து படும் இயல்பினதாகிய எனது உடம்பு அழிவுறுதலின்றி உயர்கின்ற மேன்மையான இன்ப உடம்பாகுமாறு மனமகிழ்ந்து எனக்குத் தந்தருளினாய்; இதற்கு யான் என்ன கைம்மாறு செய்வேன். எ.று.
உலகில் பெறலாகும் நன்பொருள் எல்லாவற்றினும் மிக்க தென்பது பற்றி, “விஞ்சுகின்ற சிற்றம்பலம்” என்றும், அங்கு நிகழ்த்தும் திருக்கூத்து ஆன்மாக்கட்குப் பெருநலத்தை நல்குவ தென்பது பற்றி, “அருள் நடம் விளைக்கின்ற பெருவாழ்வே” என்றும் புகழ்கின்றார். வேதங்களின் முடிபொருளாய் ஒரு நலக்குறைவு மில்லதாய் விளங்குகின்றமை தோன்ற, “எஞ்சலற்ற மாமறைமுடி விளங்கிய துணையே” என்றும், உலகியல் ஆன்மாக்கட்கு உயிர்க்குயிராகும் பெருந் துணையாய்ப் பிறங்குவது விளங்க, “என்னுயிர்த் துணையே” என்றும் ஏத்துகின்றார். வேண்டப்படும் பொருளின் அருமை பெருமைகளையும் தமது சிறுமையையும் எண்ணி நெஞ்சில் சிறிதும் அச்சமின்றிக் கேட்பதனால், “அஞ்சலின்றியே செய்த விண்ணப்பம்” எனவும், இதனைச் செவிகளில் ஏற்று அருள் செய்தமையைப் பாராட்டி, “விண்ணப்பம் ஏற்று அகங் களித்து அளித்தாய்” எனவும் வியந்து உரைக்கின்றார். தாம் பெற்றுள்ள உடம்பின் இயல்பு இது வென்றற்கு, “துஞ்சும் இவ்வுடல்” என்றும், தான் பெற விரும்பும் ஞான வுடம்பை, “மெய்ச்சுக வடிவம்” என்றும் மொழிகின்றார். (3)
|