3855.

     ஓங்கு கின்றசிற் றம்பலத்
          தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே
     தேங்கு லாவிய தெள்ளமு
          தேபெருஞ் செல்வமே சிவமேநின்
     பாங்க னேன்மொழி விண்ணப்பம்
          திருச்செவி பதித்தருள் புரிந்தாயே
     ஈங்கு வீழுடல் என்றும்வீ
          ழாதொளிர் இயல்வடி வாமாறே.

உரை:

     ஞான ஒளி கொண்டு உயர்ந்தோங்குகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கி ஆன்மாக்கட்குப் பெருவாழ்வு நல்குகின்ற பெருமானே! இனிமை பொருந்திய தெளிந்த அமுது போன்றவனே! பெருமை பொருந்திய அருட் செல்வமாகியவனே! சிவபெருமானே! நின் பக்கலிருந்து தொண்டு புரியும் யான் சொல்லுகின்ற விண்ணப்பத்தை உன்னுடைய அருட் செவிகளி லேற்று இவ்வுலகில் இறந்து வீழுதற்குரிய என்னுடம்பு எக்காலத்தும் இறந்து படாத ஞான ஒளி திகழும் உடம்பாகுமாறு அருள் புரிந்தாய்; இதற்கு யான் என்ன கைம்மாறு செய்வேன். எ.று.

     ஞானப் பெருமையால் மிக்குயர்ந்த தென்பதற்கு, “ஓங்குகின்ற சிற்றம்பலம்” என்றும், அதன்கண் நின்று ஞானத்திரு நடம் புரிந்து கண்டு பரவும் உயிர்கட்கு இன்பப் பெருவாழ்வு அருளுவது பற்றிச் சிவபெருமானை, “அருள் நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே” என்றும் துதிக்கின்றார். ஞானத் திருவருள் அமுதம் இனிமையும் தெளிவு முடையதாதலால், “தேங்குலாவிய தெள்ளமுதே” எனவும், என்றும் குறையாத பேரருட் செல்வ முடையதாதலால், “பெருஞ் செல்வமே சிவமே” எனவும் பேசுகின்றார். சிவநெறிக்கண் நின்று திருவருள் ஞானத்தை விரும்பும் தொண்டன் என்பது பற்றி வடலூர் வள்ளல் சிவனை நோக்கி, “நின் பாங்கனேன்” என்று குறிக்கின்றார். வீழுடல் - இறந்து படும் உடம்பு. இயல் வடிவம் - ஞான வடிவம்.

     (4)