3856.

     இலங்கு கின்றசிற் றம்பலத்
          தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே
     துலங்கு பேரருட் சோதியே
          சோதியுள் துலங்கிய பொருளேஎன்
     புலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக்
          கேற்றருள் புரிந்தனை இஞ்ஞான்றே
     அலங்கும் இவ்வுடல் எவற்றையும்
          அழிவுறா அருள்வடி வாமாறே.

உரை:

     ஞான ஒளி விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் அருட் கூத்தை இயற்றுகின்ற பெருவாழ்வுடைய சிவபெருமானே! எங்கும் விளங்குகின்ற பெரிய அருட் சோதியே! சோதிக்குள் சோதியாய் விளங்குகின்ற பரம்பொருளே! என் மனத்தின்கண் கொண்டு செய்யும் விண்ணப்பத்தைச் செவி குளிரக் கேட்டு, இப்பிறப்பிலேயே அசைந்து வீழ்ந்து மாயும் எனது இவ்வுடம்பு எக்காலத்தும் அழியாத நிலைமையினையுடைய அருள் உடம்பாகுமாறு எனக்கு அருள் புரிந்தாய்; இதற்கு யான் என்ன கைம்மாறு செய்வேன். எ.று.

     பொன்னும் மணியும் இழைக்கப் பெற்று நல்ல ஒளி விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் திருக்கூத் தாடுகின்ற பெருமானாதலால், “இலங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் புரிகின்ற பெருவாழ்வே” என்று ஏத்துகின்றார். திருவருள் சோதி வடிவினதாதலால் அதுவே தமக்கு ஒளியாகவும் அந்த ஒளிக்குள் விளங்கும் ஒளிப் பொருளாய்ச் சிவம் விளங்குதலின், “துலங்கு பேரருள் சோதியே” என்றும், “சோதியுள் துலங்கு பொருளே” என்றும் துதிக்கின்றார். மனத்தின்கண் நன்கு எண்ணிச் செய்கின்ற விண்ணப்பமாதல் விளங்க, “புலங் கொள் விண்ணப்பம்” என்றும், தமக்கு அருள் புரிந்ததனைத் தெளிந்து உரைக்கின்றாராதலால், “திருச்செவிக்கு ஏற்று அருள் புரிந்தனை” என்றும் தெரிவிக்கின்றார். அலங்குதல் - அசைதல். முதுமை எய்திய உடம்பு அசைவுற்று வீழ்தல் இயல்பாதலால் தமது உடம்பை, “அலங்கும் இவ்வுடல்” என்று கூறுகின்றார். என்றும் என்பது எற்றையும் என வந்தது. அருளுடம்பு என்றும் பொன்றாத பெருமை வாய்ந்ததாதலால், “அழிவுறா அருள் வடிவு” என்று அறிவிக்கின்றார்.

     (5)