3857. சிறந்த பேரொளித் திருச்சிற்றம்
பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே
துறந்த பேருளத் தருட்பெருஞ்
சோதியே சுகப்பெரு நிலையேநான்
மறந்தி டாதுசெய் விண்ணப்பம்
திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே
பிறந்த இவ்வுடல் என்றும்இங்
கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே.
உரை: சிறப்புடையதாகிய மிகுந்த அருளொளியுடைய திருச்சிற்றம்பலத்திலே விளங்குகின்ற பெருவாழ்வுடைய பெருமானே! உலகியற் பற்றுக்களைத் துறந்த பெரியோர்களின் உள்ளத்தில் ஒளிர்கின்ற அருட் பெருஞ் சோதியால் விளைகின்ற ஞான சுகத்தைத் தருகின்ற பெருநிலையை யுடைய பெருமானே! உன்னை மறவாது செய்கின்ற என்னுடைய விண்ணப்பத்தைச் செவிகளில் ஏற்றருளி மண்ணுலகில் பிறந்து வளர்கின்ற என்னுடைய உடம்பு இவ்வுலகில் எப்பொழுதும் அழியாது நிலைக்கும் பெருமையைப் பெறுமாறு எனக்கு அருள் புரிந்தாய்; ஆதலால் உன் திருவருளுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். எ.று.
மங்குதலின்றிப் பெருகின்ற ஒளி கொண்டு திகழ்வது பற்றி “சிறந்த பேரொளித் திருச்சிற்றம்பலம்” என்றும், அங்கே எப்பொழுதும் எழுந்தருளுவது பற்றி, “திகழ்கின்ற பெருவாழ்வே” என்றும் சிறப்பிக்கின்றார். ஒட்டுப் பற்றின்றி உலகைத் துறந்த அருளாளருடைய உள்ளத்தின்கண் விளங்குவது பற்றித் திருவருள் ஞானத்தை, “துறந்த பேருளத்து அருட் பெருஞ் சோதி“ என்றும், அதனால் சிவ போகத்தை நல்குதல் விளங்க, “சுகப் பெருநிலையே” என்றும், சிவபெருமானைப் பாராட்டுகின்றார். எப்போதும் மறத்தலின்றி இறைவனிடம் விண்ணப்பம் செய்யும் திறம் தோன்ற, “மறந்திடாது செய் விண்ணப்பம்” எனவும், இறவாப் பெருமையுற்ற உடம்பு பெற்று இன்புறுமாறு அருளியது புலப்பட, “பிறந்த இவ்வுடல் என்றும் இங்கு அழிவுறாப் பெருமை பெற்றிடுமாறே” எனவும் விளம்புகின்றார். (6)
|