3858. வயங்கு கின்றசிற் றம்பலந்
தன்னிலே வளர்கின்ற பெருவாழ்வே
மயங்கு றாதமெய் அறிவிலே
விளங்கிய மாமணி விளக்கேஇங்
கியங்கு சிற்றடி யேன்மொழி
விண்ணப்பம் ஏற்றருள் புரிந்தாயே
தயங்கும் இவ்வுடல் எற்றையும்
அழிவுறாத் தனிவடி வாமாறே.
உரை: சிவஞானிகளின் சித்தத்தில் விளக்கமுறுகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் வளர்ந்தருளும் சிவபோகச் செல்வ வாழ்வையுடைய கூத்தப் பெருமானே! மயக்கமில்லாத ஞானிகளின் மெய்யுணர்வில் விளங்குகின்ற மாணிக்க மணியின் நிறத்தையுடைய விளக்கமே! இவ்வுலகில் திரிகின்ற அடியேனுடைய விண்ணப்பத்தை ஏற்றருளி இன்ப துன்ப நுகர்வுகளால் தளர்கின்ற எனது இவ்வுடல் என்றும் அழிவுறாத ஒப்பற்ற தனி வடிவமாகுமாறு எனக்கு அருள் புரிந்தாய்; உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். எ.று.
வயங்குதல் - விளங்குதல். ஆன்மாக்கட்குத் திருவருள் ஞான இன்பப் பெருவாழ்வு நல்குபவனாதலால் சிவனை, “பெருவாழ்வே” என்றும், ஐயம் திரிபுகளால் கலக்கமுறாத மெய்யுணர்வு உடையோரது ஞான நிலையை, “மயங்குறாத மெய்யறிவு” என்றும், மெய்யுணர்ந்த ஞானிகளின் உள்ளத்தில் ஞான ஒளியாய் விளங்குவது பற்றி, “மயங்குறாத மெய்யறிவிலே விளங்கிய மணிவிளக்கே” என்றும் போற்றுகின்றார். மண்ணுலகில் பல இடங்கட்கும் சென்று திரிந்து சிறுமை அடைவது பற்றி, “இங்கு இயங்கு சிற்றடியேன்” என்று தம்மைக் குறிக்கின்றார். உலகியல் நலங்களை விரும்பி வருந்தி மெலிவது பற்றித் தனது உடலை, “தயங்கும் இவ்வுடல்” என்றும், அழியாப் பேருடம்பாகுமாறு வேண்டுதலின் அதனை, “அழிவுறாத் தனிவடிவு” என்றும் குறிக்கின்றார். (7)
|