3859.

     தீட்டு கின்றசிற் றம்பலந்
          தன்னிலே திகழ்கின்ற பெருவாழ்வே
     காட்டு கின்றதோர் கதிர்நடு
          விளங்கிய கடவுளே அடியேன்நான்
     நீட்டி நின்றதோர் விண்ணப்பம்
          திருச்செவி நிறைத்தருள் புரிந்தாயே
     பூட்டும் இவ்வுடல் எற்றையும்
          அழிவுறாப் பொன்வடி வாமாறே.

உரை:

     அழகுறப் புனையப்படுகின்ற திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளி விளங்குகின்ற பெருவாழ்வுடைய பெருமானே! கண்களால் காணப்படுகின்ற ஒளிப் பொருள்களுக்கு உட்பொருளாய் விளங்குகின்ற கடவுளே! அடியவனான யான் நெடிது நின்று செய்கின்ற விண்ணப்பத்தைத் திருச்செவிகளில் ஏற்று அழகிய உடைகளாலும் பூணாரங்களாலும் அழகுறுத்தப்படும் இவ்வுடல் எப்போதும் என்றும் பொன்றாமல் பொன் வடிவம் எய்துமாறு அருள் புரிந்தாயாதலால் நான் என்ன கைம்மாறு செய்வேன். எ.று.

     தீட்டுதல் - அழகுறப் புனைதல். திருநாவுக்கரசரும் திருச்சிற்றம்பலத்தைப் “பொன்னின் எழுதி வேய்ந்த சிற்றம்பலம்” என்று புகழ்வது காண்க. தனது ஒளியினால் பொருட்களை மக்கள் காணுமாறு செய்தலால், “காட்டுகின்ற கதிர்” என்றும், கதிர் விட்டொளிரும் ஒளிப் பொருள்களுக்கு உள்ளொளியாய் உறுவது பற்றி இறைவனை, “கதிர் நடு விளங்கிய கடவுளே” என்றும், தமது விண்ணப்பத்தை நீட்டித்து உரைப்பது பற்றி, “நீட்டி நின்றதோர் விண்ணப்பம்” என்றும் உரைக்கின்றார். தூய அழகிய உடைகளாலும் பொன்னால் செய்த அணிகலன்களாலும் புனைந்து அழகு செய்யப்படுவது பற்றி மக்களுடம்பை, “பூட்டும் இவ்வுடல்” எனவும், ஞான ஒளி பெற்ற வுடம்பு பொன்னிறம் பெறுதலால், “பொன் வடிவாமாறே” எனவும் விளம்புகின்றார்.

     (8)