3860. தடையி லாதசிற் றம்பலந்
தன்னிலே தழைக்கின்ற பெருவாழ்வே
கடையி லாப்பெருங் கதிர்நடு
விளங்கும்ஓர் கடவுளே அடியேன்நான்
இடைவு றாதுசெய் விண்ணப்பம்
திருச்செவிக் கேற்றருள் புரிந்தாயே
புடையின் இவ்வுடல் எற்றையும்
அழிவுறாய் பொன்வடி வாமாறே.
உரை: கதவுகளால் தடுக்கப் படுதலில்லாத சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளி விளங்குகின்ற பெருவாழ்வருளும் பெருமானே! ஒடுங்குதலில்லாத பெரிய ஒளியின் நடுவில் விளங்கும் ஒப்பற்ற கடவுளே! அடியேனாகிய நான் இடைவிடாது செய்கின்ற விண்ணப்பத்தை நின்னுடைய திருச்செவியின்கண் ஏற்று மண்ணுலகில் உலவும் எனது இவ்வுடல் என்றும் பொன்றுதலில்லாத பொன் உடலாகுமாறு அருள் புரிந்தாய்; ஆதலால் யான் இதற்கு என்ன கைம்மாறு செய்வேன். எ.று.
ஏனைக் கோயில்கள் போலக் கதவுடை வாயில்களால் தடைப்படுதல் இல்லாததாகலின், “தடையில்லாத சிற்றம்பலம்” என்றும், அதன்கண் எழுந்தருளித் தன்னை நினைந்து கண்டு வழிபடுபவர்க்கு இன்பப் பெரு வாழ்வு அளிக்கும் பெருமானாவது விளங்க, “தழைக்கின்ற பெருவாழ்வே” என்றும் புகழ்கின்றார். ஒடுங்குதலில்லாத திருவருட் பேரொளியின் நடுவில் விளங்குகின்ற அருட் பெருங் கடவுளாதல் பற்றி, “தடையில்லாப் பெருங் கதிர் நடு விளங்குமோர் கடவுளே” என்று போற்றுகின்றார். எப்பொழுதும் விண்ணப்பம் செய்து கொண்டிருப்பது விளங்க, “இடையறாது செய் விண்ணப்பம்” என்று சொல்லுகின்றார். இடைவு-இடையறவு படுதல். பூமியைக் குறிக்கும் புடவி என்னும் சொல் எதுகை நோக்கிப் புடைவி என வந்தது. ஞானவுடம்பினைப் பொன் வடிவு எனப் புகல்கின்றார். (9)
|