38. பேரருள் வாய்மையை வியத்தல்

    அஃதாவது, திருவருள் ஞானம் பெற்ற இன்பத்தால் அதனை வியந்து பாராட்டுவதாம்.

கட்டளைக் கலித்துறை

3862.

     நன்றே தருந்திரு நாடகம்
          நாடொறும் ஞானமணி
     மன்றே விளங்கப் புரிகின்ற
          ஆனந்த வார்கழலோய்
     இன்றே அருட்பெருஞ் சோதிதந்
          தாண்டருள் எய்துகணம்
     ஒன்றே எனினும் பொறேன் அருள்
          ஆணை உரைத்தனனே.

உரை:

     நன்மையை விளைவிக்கும் நாடகத்தை நாள்தோறும் அழகிய ஞான சபையில் ஆடி யருளுகின்ற இன்ப மயமான நீண்ட கழலணிந்த பெருமானே! ஒளி மயமான உனது திருவருட் பெரு ஞானத்தை எனக்குத் தந்து, என்னை ஆண்டருளுவாயாக; அந்த ஞானம் எய்துதற்கு ஒரு கணநேரம் தாமதமாகும் எனினும் என்னால் பொறுக்க முடியாது; இதனை உனது திருவருள் ஆணையாகச் சொல்லுகின்றேன். எ.று.

     ஞான சபையில் சிவபெருமான் நிகழ்த்துகின்ற திருக்கூத்து உயிர்களைப் பற்றி யிருக்கும் மன விருளைப் போக்கி ஆன்மாக்களை உய்தி பெறுவிக்கும் நலம் சிறந்ததாதலால், “நன்றே தரும் திருநாடகம்” என்றும், அது நிகழும் ஞானசபை பொன்னாலும் மணியாலும் அழகுற அமைந்திருத்தலால் அதனை, “ஞான மணிமன்று” என்றும், திருக்கூத்தாடுகின்ற திருவடி தரிசித்து அன்புடன் வணங்குகின்ற அன்பர்களுக்கு வினை மாசு போக்கி இன்பம் பெருகுவிக்கும் இயல்பினதாதலால், “ஆனந்த வார் கழலோய்” என்றும் புகழ்கின்றார். கழல் - திருவடியில் அணிகின்ற வீர தண்டை. “கழலா வினைகள் கழற்றுவ கால வனம் கடந்த அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே” என்று திருநாவுக்கரசர் உரைப்பதனால் வீர தண்டை அணிந்த இறைவன் திருவடியின் சிறப்பை அறியலாம். அருட் பெருஞ்சோதி - திருவருளாகிய பெருமை மிக்க சோதி மயமான சிவஞானம். அருட் பெருஞ் சோதியாகிய சிவஞானமே தனக்கு இன்றியமையாது வேண்டப் படுவது என்பது புலப்பட, “இன்றே அருட் பெருஞ் சோதி தந்து ஆண்டருள்” என்று முறையிடுகிறார். உலகியல் மயக்கம் மாசு படர்ந்து குற்றம் போல மனதை மூடிக்கொள்ளுவது பற்றி, “எய்து கணம் ஒன்றே எனினும் பொறேன்” என்று மொழிகின்றார். தமது பொறுக்க மாட்டாமையை வற்புறுத்தற்கு, “அருள் ஆணை”யை எடுத்தோதுகிறார்.

     இதனால், திருவருள் ஞானம் பெறுதற்கு ஒருகண நேரம் தாமத மெய்தினும் தனது பொறுக்க மாட்டாமையை வடலூர் வள்ளல் ஓதியவாறாம்.

     (1)