3864. திரைகண்ட மாயைக் கடல்கடந்
தேன்அருட் சீர்விளங்கும்
கரைகண் டடைந்தனன் அக்கரை
மேல்சர்க் கரைகலந்த
உரைகண்ட தெள்ளமு துண்டேன்
அருள்ஒளி ஓங்குகின்ற
வரைதண்ட தன்மிசை உற்றேன்
உலகம் மதித்திடவே.
உரை: திரை யிட்டது போல் அறிவை மறைக்கின்ற திரை போன்ற உலகியல் மாயையாகிய கடலைக் கடந் தொழிந்தேன்; நினது திருவருளின் சிறப்பு விளங்குகின்ற ஞான நிலையமாகிய கரையை அடைந்து விட்டேன்; அந்த ஞான நிலையமாகிய கரையின் மேல் புகழ் மிக்க இனிய சர்க்கரை கலந்த தெளிந்த அமுதத்தைப் பெற்றுண்டேன்; ஆங்கே அருளொளி எழுந்து விளங்குகின்ற சிவமாகிய மலையைக் கண்டு அதன் மேல் அறிஞர் உலகம் கண்டு என்னை நன்கு மதிக்குமாறு ஏறிக் கொண்டேன். எ.று.
ஆன்மாவின் ஞானக் கண்ணைத் திரை யிட்டது போல உலகியல் மாயை தோன்றி மறைப்பதால், “திரை கண்ட மாயைக் கடல் கடந்தேன்” என்றும், நீலக் கடல் போல் விரிந்திருக்கின்ற மாயையைக் கடந்த போது திருவருள் ஞான ஒளி திகழும் சிவஞான நிலை தோன்றக் கண்டு அதனை நெருங்கினேன் என்பாராய், “அருட் சீர் விளங்கும் கரை கண்டு அடைந்தனன்” என்றும், அந்த ஞான நிலையத்தில் தாம் பெற்ற ஞானச் சிறப்பை “அக்கரை மேல் சர்க்கரை கலந்த உரை கண்ட தெள்ளமுது உண்டேன்” என்றும், ஞான அமுதத்தை உண்டதனால் உளதாகிய ஞான வன்மையுற்று அவ்விடத்தே ஒளி மிக்கு உயர்ந்து நிற்கின்ற திருவருள் ஞானப் பொருளாகிய சிவமாகிய மலையைக் கண்டு அதன் மேல் ஏறினேன் என்பாராய், “அருளொளி ஓங்குகின்ற வரை கண்டு அதன் மிசை யுற்றேன்” என்றும், அதனால் ஞானிகளுடைய கூட்டமாகிய உலகம் என்னை நன்கு மதிக்கின்றது என்பாராய், “உலகம் மதித்திடவே” என்றும் இயம்புகின்றார்.
இதனால், ஞான நிலையத்தைக் கண்டு ஞானப் போகத்தை உண்டு சிவமாம் தன்மை எய்திய நலத்தை உரைத்தவாறாம். (3)
|