3865.

     மனக்கேத மாற்றிவெம் மாயையை
          நீக்கி மலிந்தவினை
     தனக்கே விடைகொடுத் தாணவம்
          தீர்த்தருள் தண்ணமுதம்
     எனக்கே மிகவும் அளித்தருட்
          சோதியும் ஈந்தழியா
     இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந்
          தான்மன்றில் என்னப்பனே.

உரை:

     மனத்தின்கண் படிகின்ற குற்றங்களைப் போக்கி அறிவை மயக்குகின்ற கொடிய உலகியல் மாயையை நீக்கி ஆன்மாவைப் பற்றியுள்ள வினைத் தொடர்புகளைக் கெடுத்து உள்ளத்தில் படிகின்ற ஆணவ விருளையும் போக்கிக் குளிர்ந்த ஞானமாகிய அமுதத்தை மிகுதியாக எனக் களித்து அருள் ஞான ஒளியையும் என்னுட் பரப்பி அழியாத சிவத் தொண்டர்களின் நட்பையும் எனக்குத் தந்து மன்றில் கூத்தாடுகின்ற எனக்கு அப்பனாகிய சிவபெருமான் என்னுட் கலந்து கொண்டான்; என்னே நான் பெற்ற பேறு. எ.று.

     மனக்கேதம் - மனத்தின்கண் பல்வேறு நினைவுகளால் படிகின்ற மாசு. உலகியல் வாழ்வு தரும் மயக்கத்தை மாயை எனவும், எளிதில் நீக்க முடியாத அதன் கொடுமையைப் புலப்படுத்த, “வெம்மாயை” எனவும், மனம் மொழி மெய் என்ற மூன்று கருவிகளாலும் கணந்தோறும் தீட்டப் படுவது பற்றி, “மலிந்த வினை” எனவும், ஆன்ம உணர்வின்கண் படிந்து அறியாமையை விளைவிக்கும் மலத்தை ஆணவ மெனவும் குறிக்கின்றார். மனம் தூய்மையுற்று மாயையின் நீங்கி வினை மாசு துடைத்து ஆணவவிருளைப் போக்கிக் கொண்டவிடத்துச் சிவஞானம் தோன்றிப் பிறவி வெம்மையைத் தணித்து ஞான விளக்கம் தருதலின், “அருள் தண்ணமுதம் எனக்கே மிகவும் அளித்து அருட் சோதியும் ஈந்து அழியா இனக்கேண்மையும் தந்து என்னுட் கலந்தான்” என்று கூறுகின்றார். பெற்ற அருட்சோதி நீங்காவண்ணம் ஒழியாது உடனிருந்து துணை புரிதலின் கொண்டாரது கேண்மையை, “அழியா இனக் கேண்மை” என்று புகழ்கின்றார். அழியாமை - ஈண்டு நீங்காமை மேற்று.

     இதனால், ஞான அமுதுண்டு, அருட் சோதி பெற்றுத் தொண்டர் கேண்மையும் எய்தியது தெரிவித்தவாறாம்.

     (4)