3866.

     வாதித்த மாயை வினையா
          ணவம்எனும் வன்மலத்தைச்
     சேதித்தென் உள்ளம் திருக்கோயி
          லாக்கொண்டு சித்திஎலாம்
     போதித் துடம்பையும் பொன்னுடம்
          பாக்கிநற் புத்தமுதும்
     சாதித் தருளிய நின்னருட்
          கியான்செயத் தக்கதென்னே.

உரை:

     ஆன்ம வுணர்வோடு பிணங்குகின்ற மாயை, வினை, ஆணவம் எனப்படுகின்ற வலிமை மிக்க மும்மலங்களையும் போக்கி என்னுடைய உள்ளத்தையே தூய கோயிலாகக் கொண்டு ஞான சித்தி வகைகள் எல்லாவற்றையும் எனக்கு அறிவித்து எனது உடம்பையும் ஞானம் நிறைந்த பொன்னிற உடம்பாக்கி நல்ல புதுமையான ஞான வமுதத்தையும் எனக்குத் தந்தருளிய நின்னுடைய திருவருளுக்கு யான் செய்யத் தக்க கைம்மாறு யாதாம். எ.று.

     அறியாமையைச் செய்யும் ஆணவ மலத்தையும், உலகு உடம்புகளைத் தந்து துன்பத்தில் அழுத்தும் மாயா மலத்தையும், மாயையைக் கருவியாகக் கொண்டு செய்யப்படும் கர்ம மலத்தையும் போக்குதற்கு உயிர் வாழ்வு நாளும் இயங்கிய வண்ணமிருத்தலின், “வாதித்த மாயை வினை ஆணவம் எனும் மலம்” எனவும், இவற்றின் செயல் வகைகளை ஒடுக்கினாலன்றி ஆன்மாவுக்கு உறுதிப் பேறு எய்தாமை பற்றி, “வன்மலத்தைச் சேதித்து” எனவும் இயம்புகின்றார். மலம் நீங்கியவிடத்து உள்ளம் ஞான மணமுற்றுத் தூயதாய்த் துலங்குவதால், “உள்ளம் திருக்கோயிலாக் கொண்டு” என்று கூறுகிறார். இறைவன் மனமாகிய கோயிலுக்குள் எழுந்தருளி ஞானத்தால் பெறுதற்குரிய நலமனைத்தையும் உள்ளிருந்து உணர்த்துதலால், “உள்ளம் திருக்கோயிலாக் கொண்டு சித்தி எலாம் போதித்து” என்று புகல்கின்றார். மனம் சிவனுக்குத் திருக்கோயிலாகிய விடத்து மனத்தை உள்ளே கொண்டு நிற்கும் உடம்பு இயற்கை நிறம் நீங்கிச் சிவஞானப் பேரொளியால் பொன்னிறமும் ஞானவமுதமாகிய புத்தமுதத்தை உண்டு தேக்கெறிவது தோன்ற, “உடம்பையும் பொன்னுடம்பாக்கி நற்புத்தமுதம் சாதித்து அருளிய நின் அருளுக்கு” என்று விரித்துரைக்கின்றார்.

     இதனால், தன் மனக்கோயிலில் இறைவன் எழுந்தருளி ஞானோபதேசம் செய்து உடம்பையும் பொன் உடம்பாக்கி அருளமுதம் தந்தருளிய செய்தியை விளம்பியவாறாம்.

     (5)