3867. செத்தார் எழுகெனச் சிந்தைசெய்
முன்னஞ் சிரித்தெழவே
இத்தா ரணியில் அருட்பெருஞ்
சோதி எனக்களித்தாய்
எத்தாலும் என்றும் அழியா
வடிவுதந் தென்னுள்நின்னை
வைத்தாய் மணிமன்ற வாணநின்
பேரருள் வாய்மையென்னே.
உரை: மணிகள் இழைத்த அம்பலத்தின்கண் எழுந்தருளுகின்ற பெருமானே! செத்தவர்கள் எழுவார்களாக என நினைப்பதற்கு முன்னமே நான் சிரித்து மகிழுமாறு இம்மண்ணுலகில் எனக்குத் திருவருள் ஞானமாகிய ஒளியை அளித்தருளினாய்; அதன் மேலும் எவ்வகையாலும் எக்காலத்தும் கெடாத ஞான வடிவு தந்து என்னுள் உன்னையே இடம் பெற வைத்தாய்; ஆதலால் உன்னுடைய பெரிய திருவருளின் மெய்ம்மையை என்னென்பது. எ.று.
மண்ணுலகில் உயிர் நீத்து இறந்தவர்கள் அதனை மீளப் பெற்று எழுவார்களாக என்று நினைக்கின்றேனாயினும் நினைப்பதற்கு முன்னமே அந்நிலை கைகூடப் பெற்று என் மனம் மகிழுமாறு எனக்கு உனது திருவருளாகிய ஒளியைத் தந்தருளினாய் என உரைப்பாராய், “செத்தார் எழுகெனச் சிந்தை செய் முன்னம் சிரித்தெழவே இத்தாரணியில் அருட் பெருஞ்சோதி எனக்கு அளித்தாய்” என்று கூறுகின்றார். மண்ணுலகில் செத்தவர்கள் மீள எழுவதில்லை என்பது பெரும்பாலும் உண்மையாயினும் இது நிகழுமாறு எனக்கு உனது அருட் பெருஞ் சோதியை அளித்தாய் என்றற்கு, “இத்தாரணியில்” என்று விதந்து ஓதுகின்றார். தான் பெற்ற சிவஞான மயமான உடம்பு இத்தகையது எனச் சிறப்பித்தற்கு, “எத்தாலும் என்றும் அழியா வடிவு தந்து” என்றும், தமக்குள்ளே இறைவன் எழுந்தருளி யுள்ள தன்மையை வெளிப்படுத்தற்கு, “என்னுள் நின்னை வைத்தாய்” என்றும் மொழிகின்றார். இவ்வாறே சுந்தரமூர்த்திகளும், “எத்தாலும் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய்” என்று கூறுவது காண்க. இறைவனை நேரிற் கண்டு கொண்டு வந்து தனக்குள் வைத்துக் கொள்வது ஆன்மாவிற்கு ஆகாத தொன்றாதலால், இறைவனே மனமுவந்து தானே வந்து தன்னுடலில் தங்குவதைக் குறிப்பிப்பாராய், “என்னுள் நின்னை வைத்தாய்” எனவும், வாத பித்த சிலேத்துமங்களாலாகிய உடம்பின் தன்மையை மாற்றி ஞானவுடம்பானாலன்றி அவன் தன்னுள் புக மாட்டான் என்ற உண்மை விளங்க, “அழியா வடிவு தந்து என்னுள் நின்னை வைத்தாய்” எனவும் உரைக்கின்றார். இவ்வாறு உடம்பை ஞான மயமாக்கி அதனுட் புகுந்திருத்தல் இறைவனுடைய திருவருட் சிறப்பாதல் தோன்ற, “நின் பேரருள் வாய்மை என்னே” என்று பராவுகின்றார்.
இதனால், நமது உடம்பை ஞான வுடம்பாக்கி இறைவன் எழுந்தருளும் திறம் உரைத்தவாறாம். (6)
|