3868. ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும்
தந்திந்த அண்டபிண்ட
வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின்
வண்ணம் விளங்குகநீ
ஏக்கமு றேல்என் றுரைத்தருட்
சோதியும் ஈந்தெனக்கே
ஊக்கம்எ லாம்உற உட்கலந்
தான்என் உடையவனே.
உரை: படைத்தல் என்ற தொழிலோடு அழித்தல், அளித்தல், அருளல், மறைத்தல் என்ற தொழில் வகை ஐந்தையும் தந்து இந்த அண்டம் பிண்டம் என மிகைபட விரிந்து விளங்கும் அனைத்திலும் சென்று உன் விருப்பப்படி கலந்து விளங்குக; இது குறித்து இனி நீ ஏங்குதல் வேண்டாம் என மொழிந்தருளி அருள் ஞானமாகிய ஒளியையும் எனக்குத் தந்து எல்லா வகையான ஊக்கங்களும் என்னுட் பொருந்த எனை யுடையவனாகிய சிவபெருமான் என்னுட் கலந்து கொண்டான். எ.று.
ஆக்கல், அழித்தல், அளித்தல், அருளல், மறைத்தல் என்ற ஐவகைத் தொழிலையும் புரிவது இறைவனுடைய அருட் செயலாகும். அதனை இறைவன் தனக்கு அளித்தான் என்பாராய், “ஆக்கல் ஒன்றோ தொழில் ஐந்தையும் தந்து” எனவும், அகில உலகத்திலு முள்ள அண்ட பிண்டம் எனப்படும் பொருள் வகைகளில் கலந்தியங்கும்வண்ணம் தனக்கு அருள் பாலித்துள்ளான் என்பாராய், “இந்த அண்ட பிண்ட வீக்கம் எல்லாம் சென்று உன் இச்சையின் வண்ணம் விளங்குக” எனவும், இந்தப் பேராற்றல் தனக்கு எய்துமோ என எண்ணி ஏங்குதல் வேண்டா என்று அறிவுறுத்தினான் என்பாராய், “நீ ஏக்கமுறேல் என்று உரைத்து” எனவும் இயம்புகின்றார். ஏக்கமும் ஐயமும் தீரும் பொருட்டு அருள் ஞானத்தை வழங்கினான் என்றற்கு, “அருட் சோதியும் ஈன்று” என்றும், அதனால் தமக்குக் கலக்கமில்லாத ஊக்கமும் தெளிவும் உண்டாயின என உரைப்பாராய், “எனக்கே ஊக்கமெலாம் உற உட்கலந்தான்” என்றும், அவனுக்கும் தமக்குமுள்ள தொடர்பை விளக்குதற்கு, “என்னுடையவன்” என்றும் எடுத்துரைக்கின்றார்.
இதனால், ஐவகைத் தொழில் புரியும் ஆற்றலையும் அதற்கு இன்றியமையாத அருட் சோதியையும் இறைவன் தந்தருளினமை தெரிவித்தவாறாம் (7)
|