3869.

     என்னேஎன் மீதெம் பெருமான்
          கருணை இருந்தவண்ணம்
     தன்னேர் இலாத அருட்பெருஞ்
          சோதியைத் தந்துலகுக்
     கன்னே எனவிளை யாடுக
          என்றழி யாதசெழும்
     பொன்னேர் வடிவும் அளித்தென்
          உயிரில் புணர்ந்தனனே.

உரை:

     எங்கள் பெருமானாகிய சிவபிரான் தனக்கு ஒப்பில்லாத அருட் பெருஞ் சோதியாகிய திருவருள் ஞானத்தை எனக்குத் தந்து இவ்வுலகுக்குத் தாய் போல் தலையளி செய்து வாழ்க வென்று மொழிந்து அழிவில்லாத செழுமையான பொன்னிற மேனியைத் தந்து என் உயிர்க்குயிராய்க் கலந்து கொண்டான்; எளியவனாகிய என் மீது அப்பெருமான் செய்துள்ள கருணையை என்னென்பேன். எ.று.

     அருட் பெருஞ் சோதியாகிய திருவருள் ஞானத்திற்கு நிகர் ஒன்றுமில்லையாதலால் அதனை, “தன்னே ரில்லாத அருட் பெருஞ் சோதி” என்றும், அச்சிவ ஞானத்தால் எல்லா வுயிர்களிடத்தும் தாய் போல் அன்பு செய்யும் தன்மை தமக்கு உண்டானது விளங்க, “உலகுக்கு அன்னே என விளையாடுக” என்று உரைத்தருளினான் என்றும், அந்த ஞானத்தால் தமது மேனி பொன்னிறம் பெற்றமை விளங்க, “செழும் பொன்னேர் வடிவம் அளித்து” என்றும், முடிவில் அப்பெருமான் தன் உயிர்க்குயிராய்க் கலந்து கொண்டதை, “என் உயிரில் புணர்ந்தனன்” என்றும் புகல்கின்றார். அன்னை என்பது அன்னே என வந்தது.

     இதனால், அருட் பெருஞ் சோதியைத் தந்து தனக்குப் பொன்னிற வடிவம் அருளியதை வியந்துரைத்தவாறாம்.

     (8)