3870.

     அச்சோ என்என்று புகல்வேன்என்
          ஆண்டவன் அம்பலத்தான்
     எச்சோ தனையும் இயற்றாதென்
          னுட்கலந் தின்னருளாம்.
     மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக்
          கேற்றி விரைந்துடம்பை
     இச்சோதி ஆக்கி அழியா
          நலந்தந்த விச்சையையே.

உரை:

     என்னை ஆண்டருளிய பெருமானும் அம்பலக் கூத்தனுமாகிய சிவபெருமான் எவ்வகையான சோதனைகளையும் செய்யாமல் என் மனத்தினுட் கலந்து கொண்டு இனிய தன்னுடைய திருவருள் ஞானமாகிய மெய்ம்மை ஒளியைத் தந்தருளி என்னையும் மேனிலையில் உயர்த்தி என் உடம்பையும் ஞான ஒளி யுடைய உடம்பாக விரைந்து செய்து கெடாத நன்மையைத் தந்தருளிய வித்தையை ஆ ஆ என்னென்று சொல்வேன். எ.று.

     சிவத் தொண்டர்களின் வரலாற்றால் பல்வகைச் சோதனைக்கட்குப் பின்பே இறைவன் அருளிய திறம் தெரிகின்றமையின் தமக்கு அத்தகைய சோதனை ஒன்றுமின்றியே, பெருமான் அருள் புரிந்ததை உணர்கின்றமை புலப்பட, “எச்சோதனையும் இயற்றாது என்னுட் கலந்து” என்றும், பெற்ற திருவருள் ஞானத்தை, “இன்னருளாம் மெய்ச் சோதி” என்றும், அந்த ஞானத்தால் தாம் உள்ளத்தால் உயர்ந்தமை விளங்க, “எனை மேல் நிலைக்கு ஏற்றி” என்றும், தமது உடம்பு அருளொளி திகழும் பொன்னிற உடம்பாக்கிய சிறப்பை வியக்கின்றாராதலால், “உடம்பை இச்சோதியாக்கி அழியா நலம் தந்த விச்சை” என்றும் இயம்புகின்றார். தமது மேனியின்கண் உண்டாகிய பொன்னிற வொளியை வியந்து போற்றுகின்றாராதலின், “அச்சோ என்னென்று புகல்வேன்” என மொழிகின்றார்.

     இதனால், அம்பலக் கூத்தனாகிய பெருமான் தமக்குத் திருவருள் ஞான ஒளி தந்து அழியா நலமருளிய வித்தையை எடுத்தோதியவாறாம்.

     (9)