3871.

     வாழிஎன் ஆண்டவன் வாழிஎங்
          கோன்அருள் வாய்மைஎன்றும்
     வாழிஎம் மான்புகழ் வாழிஎன்
          நாதன் மலர்ப்பதங்கள்
     வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப்
          பெருநெறி மாண்புகொண்டு
     வாழிஇவ் வையமும் வானமும்
          மற்றவும் வாழியவே.

உரை:

     என்னை ஆண்டு கொண்டவனும் எனக்குத் தலைவனுமாகிய சிவபெருமான் வாழ்க; அவனுடைய திருவருள் ஞானத்தின் மெய்ம்மை எக்காலத்தும் வாழ்க; அப்பெருமானுடைய புகழ் வாழ்க; எனக்கு நாதனாகிய அவனுடைய மலர் போன்ற திருவடிகள் வாழ்க; அப் பெருமான் அருளிய மெய்ம்மை சான்ற சுத்த சன்மார்க்கமாகிய பெரிய நெறி மாண்பு மிகுந்து வாழ்க; அவனது திருவருள் நிலவும் இம்மண்ணுலகமும் வானுலகமும் மற்றவைகளும் வாழ்க. எ.று.

     சிவபெருமானை நினைந்து பெற்ற திருவருள் ஞானத்தைப் பெற்று இன்புறுதலால் அதனை நினைந்து பெறும் இன்ப மிகுதியால் வாழ்த்துகின்றாராதலின், “வாழி என் ஆண்டவன் வாழி என் கோன் அருள் வாய்மை” என்று வாழ்த்துகின்றார். அவர் அருளிய திருஞானத்தால் அவரது பெரும் புகழும் அவரது திருவடிச் சிறப்பும் பாராட்டலுற்று, “என்றும் வாழி எம்மான் புகழ் வாழி என் நாதன் மலர்ப்பதங்கள்” என்று கூறுகின்றார். திருவருள் ஞானத்தைப் பெற்று மகிழ்தற்குரிய நன்னெறியாதலால், “மெய்ச் சுத்த சன்மார்க்கப் பெருநெறி மாண்பு கொண்டு வாழி” எனவும், இறைவன் புகழும் அவருடைய சன்மார்க்கப் பெருநெறியும் நிலவுமிடமாதலின் மண்ணுலகும் விண்ணுலகுமாகிய வேறு பிற உலகங்களும் நிலைபெறுக என்பாராய், “வாழி இவ்வையமும் வானமும் மற்றவும் வாழியவே” என்று உரைக்கின்றார்.

     இதனால், தாம் பெற்ற திருவருள் ஞானத்தையும் திருவருள் ஞான நெறியாகிய சுத்த சன்மார்க்கப் பெருநெறியையும் வடலூர் வள்ளல் வாழ்த்தி இன்புற்றவாறாம்.

     (10)