3874.

     கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்
          கற்பங்கள் கணக்கில கடப்ப
     நிலைகளோர் அனந்தம் நேடியும் காணா
          நித்திய நிற்குண நிறைவே
     அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும்
          அருட்பெருங் கடல்எனும் அரசே
     புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து
          பொதுநடம் புரிகின்ற பொருளே.

உரை:

     கலைகள் எண்ணிறந்தனவாய்ப் பெருகி மேன்மேல் நுணுகிக் கண்டு கணக்கிலடங்காத கற்ப காலங்கள் கடக்கவும், எண்ணிறந்த பதங்களில் உறைபவர்கள் தேடியும் காணாத நித்தமாய் நிர்க்குணமாய் நிறைந்து விளங்கும் பெருமானே! எண்ணிறந்த உயிர்கட்கு ஞானமாகி அமுதளித்தருளும் அலைகளில்லாத திருவருளாகிய பெரிய கடல் என்று சொல்லப்படுகின்ற அருளரசே! புலை, களவு முதலிய குற்றங்கள் இல்லையாக எனக்குள்ளே நிறைந்து அம்பலத்தில் நடம் புரிகின்ற பரம்பொருளே, வணக்கம். எ.று.

     உலகம் தோன்றிய நாள் முதற் கொண்டு எண்ணிறந்த அறிஞர்கள் தோன்றி அளவில்லாத கலை நுட்பங்களைக் கொண்டு அவற்றின் வாயிலாக இறைவனாகிய பரம்பொருளைக் காண்பதற்கு முயன்றமை புலப்படுத்தற்கு, “கலைகள் ஓர் அனந்தம்” என்றும், தத்துவப் படிகளின் மேலும் மேலும் சென்று கணக்கில்லாத கற்ப காலங்கள் கழித்தவை தோன்ற, “கற்பங்கள் கணக்கில கடப்ப” என்றும், இந்திரன் முதலிய தேவர்களும், அவர்களுக்கு மேன் மேலுள்ள பதங்களில் உறையும் தேவ தேவர்களும் தேடிய வரலாறும் விளங்க, “நிலைகள் ஓர் அனந்தம் நேடியும் காணா” என்றும், தன்னைக் காண முயன்ற கலைத் துறைகளையும், கற்ப கோடி காலங்களின் கழிவும் மேன் மேலாக, முடிவின்றி இருக்கின்ற தேவ பதங்களும் எல்லாம் அழியவும் தான் மட்டில் அழியாமையும், மாயா மண்டலத்து குணதத்துவத்திற்கு அப்பாலாயும், எல்லாம் குறைவற நிறைந்ததாயும் உள்ளது சிவம் என்பதை விளக்குதற்கு, “கலைகள் ஓர் அனந்தம் அனந்த மேல் நோக்கிக் கற்பகங்கள் கணக்கில கடப்ப நிலைகள் ஓர் அனந்தம் நேடியும் காணா நித்திய நிர்க்குண நிறைவே” என்றும் கூறுகின்றார். “நிர்க்குணனாய் நிர்மலனாய் நித்தியானந்தனாய் தற்பரமாய் நின்ற தனி முதல்வன்” என மெய்க்கண்டாரும், “வான் கெட்டு மாருதம் மாய்ந்து மண் கெடினும் தான் கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையன்” (தெள்ளே) என்று மாணிக்கவாசகரும் இக்கருத்தைக் குறித்து அருளுவது காண்க. வாழும் உயிர்களுக்கு ஞானம் அருளி உய்விப்பதே அருளுருவாகிய இறைவனது செயலாதலால், “உயிருக்கு அமுதளித்து அருளும் அருட் பெருங் கடலெனும் அரசே” என்று புகழுகின்றார். அருளே நிறைந்த பெரிய கடல் என்பதால் அக்கடலின்கண் அலைகள் இல்லை என்பது தோன்ற, “அலைகளற்று அருளும் அருட் பெருங்கடல்” என்று சிறப்பிக்கின்றார். ஏனைக் கடல்கள் எல்லாவற்றிலும் அலை யுண்டாதலால் அவற்றின் வேறுபடுத்தற்கு “அலைகளற்று” என்று சிறப்பிக்கின்றார். எனினும் அமையும். புலை, களவு முதலிய குற்றங்கள் தன்பால் உளவாகாமல் நீக்கித் தூய்மை செய்து எனக்குள்ளே நீக்கமற நிறைந்து நிற்கின்றது என்பாராய், “புலை களவு அகற்றி எனக்குள்ளே நிறைந்து பொது நடம் புரிகின்ற பொருளே” என்று புகல்கின்றார்.

     இதனால், உயிர்க்கு ஞான அமுதளித்து, அருள் புரியும் பரமன் உயிரிடத்துள்ள கொலை, களவு முதலிய குற்றங்களைப் போக்கி நிறைந்து விளங்குகின்றான் என்பது தெரிவித்தவாறாம்.

     (3)