3875.

     தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே
          சத்திய சாத்தியக் கனலே
     ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே
          உலகெலாந் தழைக்கமெய் உளத்தே
     நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே
          நல்கிய ஞானபோ னகமே
     புண்ணிய நிதியே கண்ணிய நிலையே
          பொதுநடம் புரிகின்ற பொருளே.

உரை:

     குளிர்ந்த மதி போல்பவனே! ஒப்பற்ற சிவந்த சூரியன் போன்றவனே! நித்தியமாய் பல்வகையான சாதனங்களால் சாதித்துக் கொள்ளக் கூடிய ஞானக் கனலே! காட்சிக்கு அகப்படக் கூடிய ஒளிப் பொருளே! ஒளிப் பொருட்கள் எல்லாவற்றிற்கும் உள்ளொளியாய் விளங்கும் முதலொளியே! உலகங்கள் எல்லாம் இனிது வளமுற மெய்யுணர்ந்த ஞானிகளின் திருவுள்ளத்தில் பொருந்தி விளங்கும் ஞான விளக்கமே! ஞானிகள் எண்ணியவாறு அவர்கட்கு நல்கிய ஞானாமிர்தமே! புண்ணியச் செல்வமே! கருதிய சிவநிலையே! அம்பலத்தில் ஆடல் புரிகின்ற பரம் பொருளே, வணக்கம். எ.று.

     உலகில் விளங்குகின்ற ஒளிப் பொருள்களான சந்திரன் சூரியன் என்ற இரண்டினுக்கும் குளிர்ச்சித் தன்மையாலும் செந்நிற ஒளியுடைமையாலும் மேம்பட்டிருத்தல் பற்றிச் சிவனை, “தண்ணிய மதியே தனித்த செஞ்சுடரே” எனவும் ஆங்காங்குத் தோன்றி மறைகின்ற தீயினும் வேறாய் அளவைகளாலும், யோகம் சரியை கிரியை முதலிய தவங்கள் ஆகிய ஞான சாதனங்களால் பெறுதற்குரிய ஞானத் தீயாய் விளங்குவது தோன்ற, “சத்திய சாத்தியக் கனலே” எனவும் இயம்புகின்றார். உலகியலில் காணப்படும் ஐம்பூதங்களில் ஒன்றாகிய தீ உலகியற் பொருளாகிய கல், இரும்பு முதலிய சாதனங்களில் பிறப்பித்துக் கொள்ளுவது போலத் தவயோகச் சாதனங்களால் சிவமாகிய ஞானக் கனலும் பெறுவித்துக் கொள்வது என்பது புலப்பட, “சாத்தியக் கனலே” என்று குறிக்கின்றார். உலகியல் வாழ்வு ஒளியும் மக்களால் பெறப்படும் தன்மைத்தாதல் போலச் சிவபர ஒளியும் பெறப்படுவது என்றற்கு, “ஒண்ணிய ஒளியே” என்றும், இவ்வொளிகளைப் போல்வதாயினும் இவை எல்லாவற்றிற்கும் உள்ளுறை காரண முதல் ஒளியாய் இருப்பது விளங்க, “ஒளிக்குள் ஓர் ஒளியே” என்றும் இயம்புகின்றார். இவ்வாறு ஞானசம்பந்தர் முதலியோர் இறைவனை, “சோதி முழுமுதலாய் நின்றார்” என்றும், “சோதியுட் சோதியாய் நின்ற சோதி” என்றும் எடுத்தோதுவது காண்க. உலகில் ஞானவான்களின் ஞானம் நிறைந்த திருவுள்ளத்தின்கண் எழுந்தருளி ஏனை உலக மக்கள் பலரும் உய்தி பெற அருளுவது பற்றி, “உலகெலாம் தழைக்க மெய்யுளத்தே நண்ணிய விளக்கே என்று புகழ்கின்றார். தவஞானிகள் எண்ணியவாறு ஞான இன்பத்தை நல்கும் சிறப்புப் பற்றி, “எண்ணிய படிக்கே நல்கிய ஞான போனகமே” என்று நவில்கிறார். தவத்தால் எண்ணிய எண்ணியாங்கு எய்தப்படுவது பற்றித் தவஞானிகள் என்பது வருவிக்கப்பட்டது. ஞான போனகம் - ஞானமாகிய அமுதம். உண்ணப்படுவது பற்றி ஞானாமிர்தம் போனகம் எனப்பட்டது. புண்ணியச் செல்வம் போல் எல்லா நலங்களையும் தருவதாதலின், “புண்ணிய நிதியே” என்று புகல்கின்றார். போக நுகர்ச்சிக்குரிய தேவ பதங்கள் யாவும் இறைவன் திருவருளால் புண்ணியவான்களுக்கு எய்துவது என்பது பற்றி, “கண்ணிய நிலையே” என்று கூறுகின்றார்.

     இதனால், உலகிலுள்ள ஆன்மாக்கள் ஞான ஒளி பெற்று உய்யும் பொருட்டுப் பரம்பொருள் அவர்கள் திருவுளத்தில் எழுந்தருளுகின்றான் என்பது தெரிவித்தவாறாம்.

     (4)