3876.

     அற்புத நிறைவே சற்புதர் அறிவில்
          அறிவென அறிகின்ற அறிவே
     சொற்புனை மாயைக் கற்பனை கடந்த
          துரியநல் நிலத்திலே துலங்கும்
     சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்
          செல்வமே சித்தெலாம் புரியும்
     பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே
          பொதுநடம் புரிகின்ற பொருளே.

உரை:

     அற்புதங்களின் நிறைபொருளே! ஞானிகளின் அறிவுக்கறிவாய் ஒளிர்ந்து அறிகின்ற அறிவு வடிவானவனே! சொற்களால் புனைந்துரைக்கப்படும் மாயையின் கற்பனையைக் கடந்து துரிய நிலையின்கண் விளங்குகின்ற ஞான மயமான பரஞ்சுடரே! தற்பர ஞானமாகிய செல்வமே! சித்து எல்லாவற்றையும் செய்யும் அழகிய அறிவு நலமளித்த நல்லுணர்வுக் கருத்தே! அம்பலத்து நடம் புரிகின்ற பரம்பொருளே, வணக்கம் எ.று.

     பொருட்களின் பெருமை சிறுமைகளையும், புதுமை பழைமைகளையும், ஆக்கக் கூறுகளையும் காணுமிடத்து காண்பார் உள்ளத்தில் உளதாகும் வியப்புணர்வு அற்புதம் எனப்படும். அந்த அற்புதக் கூறுகள் அனைத்தும் குறைவற நிறைந்தமை பற்றிச் சிவபரம்பொருளை, “அற்புத நிறைவே” என்று போற்றுகின்றார். சற்புதர் - ஞானவான்கள். ஞானிகளின் உள்ளத்தில் நிகழ்கின்ற ஞானத்திற்கு ஞானமாய் விளங்கும் சிவஞான வடிவுடையவனாதலின் அதனை விளக்குதற்கு, “சற்புதர் அறிவில் அறிவென அறிகின்ற அறிவே” என்று தெரிவிக்கின்றார். மாயா காரியங்களாகிய கருவி கரணங்களைக் கடந்து துரியாவத்தையில் உந்திக்கண் வைத்துக் காணப்படுதலின், “சொற்புனை மாயைக் கற்பனை கடந்த துரிய நல் நிலத்திலே துலங்கும் சிற்பரஞ் சுடரே” என்று செப்புகின்றார். என்ன தன்மைத் தென அறியப் படாமை பற்றி மாயையை, “சொற்புனை மாயை” என்றும், அதனால் உளதாகும் கற்பனைகட்கு அப்பால் விளங்குவதாகலின் துரியாவத்தையை, “மாயைக் கற்பனை கடந்து துரிய நன்னிலம்” என்றும், அங்கிருந்து நோக்கும் ஆன்ம நாட்டத்திற்குப் புலனாதலின், “துரிய நல்நிலத்திலே துலங்கும் சிற்பரஞ் சுடரே” என்றும் சொல்லுகின்றார். பரஞ்சுடர் ஞானவொளி யுடையதாதல் பற்றி, “சிற்பரஞ்சுடர்” என்று சிறப்பிக்கின்றார். சிவபரம்பொருளையே பற்றுக் கோடாகக் கொண்டு ஞான ஒளி செய்வது பற்றி, “தற்பர ஞானச் செல்வமே” என நவில்கின்றார். பொற்புலம் - அழகிய அறிவு. சித்தெல்லாம் உரிய வல்ல ஆன்ம அறிவின்கண் புலனாதலால், “பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே” என்று நவில்கின்றார்.

     இதனால், மாயையை விளைக்கும், கற்பனைகளைப் படிப்படியாகக் கடந்து விளங்கும் துரியக் காட்சியில் காணப்படும் சிவ பரஞ்சுடரின் சிறப்பினை உரைத்தவாறாம்.

     (5)